சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது!

கனடாவில் இந்துக்கள் மற்றும் இந்து கோயில்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் இன்று (நவ.8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

கனடாவில் உள்ள இந்து கோயில்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று காலை காவல்துறையின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று நினைத்து 100க்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இதனால் அண்ணா சாலையில் இன்று காலை பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 11 பேர் மட்டுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அந்த 11 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். அர்ஜுன் சம்பத்தின் கார் ஓட்டுநரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதானதால், அவரது கார் கேட்பாரின்றி சாலையில் நின்றது. அந்த காரை போலீசார் அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்தனர்.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது:-

கனடா நாட்டில் இந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பெரும் துன்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தேர்தல் அரசியலுக்காக, அங்கு வாழும் 7 லட்சம் சீக்கியர்களின் ஓட்டுகளுக்காக காலிஸ்தான் பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடுகிறார். இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தவறிவிட்டார். இது கண்டிக்கத்தக்கது. கனடாவில் வாழும் இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே சென்னை அண்ணா சாலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் சிறையில் அடைக்கப்படுவாரா விடுவிக்கப்படுவாரா என்பதை போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.