ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு என்பதில் தவறில்லை: ஜி.கே.வாசன்!

“தமிழகத்தில் ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு என்பதில் தவறில்லை. அது, கட்சியின் வளர்ச்சிக்கு உதவும்” என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மதுரை செல்லூர் பகுதியில் ‘பாலாஜி மல்டி ஸ்பெஷாலிட்டி’ என்ற தனியார் மருத்துவமனையை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று (நவ.8) திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

சென்னைக்கு அடுத்து மக்கள் தொகை அதிகரித்துள்ள மதுரைக்கு பல்வேறு வளர்ச்சி, வசதிகள் என்பது தேவை. பல போட்டிகளுக்கு இடையில் மத்திய அரசு மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்துள்ளது. அது, படிப்படியாக முன்னேறி வருகிறது. இம்மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கும் நிலை ஏற்படும். சுகாதார கட்டமைப்புக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. மாற்றான் தாய் மனப்பான்மையின்றி எல்லா மாநிலத்துக்கும் மத்திய அரசு போதிய நிதி வழங்குவதால் சுகாதாரத்துறை முன்னேற்றம் கண்டுள்ளது. உலகளவிலும் இது போற்றப்படுகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பது வரலாற்றில் புகழைப் பெறும். தற்போது, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு மருத்துவக் காப்பீடு என்ற திட்டத்தை பிரதமர் அறிவித்திருப்பது, முதியவர்களுக்கு அளிக்கும் மரியாதை. அவர்களின் உடல் நலன் மீது பிரதமர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்,” என்று கூறினார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை. அதிமுக ஒன்றிணைந்தால் வெல்லும் என்ற முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்துக்கு நான் எதிர் கருத்துச் சொல்லமாட்டேன். ஆனாலும், 1999-ல் மூப்பனார் தலைமையிலான கூட்டணியின் போது, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் மூப்பனாரால் எழுப்பப்பட்டது. இது ஒன்றும் தவறில்லை. கட்சியின் வளர்ச்சிக்கு உதவும். அதிகார பங்களிப்புக்கு ஒத்தக் கருத்துடைய நல்ல கூட்டணி, பலம், மக்களின் நம்பிக்கை, போதிய எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை இருக்கவேண்டும்” என்றார்.