செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் மா.செல்வராசனுக்கு மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கு, இந்தாண்டு சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் மா.செல்வராசன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுடன், ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ், கருணாநிதி சிலையை வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முயற்சியால், 2004-ல் நாட்டில் முதல் முறையாக தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழுக்காக தனித்தன்மையுடன் ஒரு நிறுவனம் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தினார். அதன்படி, 2006-ல் இந்திய மொழிகளுக்கான ஒன்றிய நிறுவனத்தின் ஓர் அங்கமாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைவர் தமிழக முதல்வராவார். இந்நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி, தம் சொந்த நிதி ரூ.1 கோடியை வைப்புத் தொகையாக அளித்து கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளையை கருணாநிதி நிறுவினார். அந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்படுகிறது.
விருதுபெற்ற மா. செல்வராசன் கடந்த 1946-ம் ஆண்டு பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் இக்காலத் தமிழ் இலக்கியத் துறையில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பேராசிரியர் மு.வரதராசனார், மேற்பார்வையில் ‘பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர்’ என்னும் பொருள் குறித்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றவர்.
பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர், பாரதிதாசன் கலைகள், பாரதிதாசன் ஒரு பார்வை, இலக்கியத்தில் குறுக்கும் நெடுக்கும், இலக்கியத்தில் மெல்லுரை, நல்லோர் குரல்கள், வைகறை மலர்கள், கிளறல்கள், செம்புலப்பெயல் நீர், முரசொலி முழக்கம், வண்ணச்சாரல் வாழ்த்துக் கதிர் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.
விருது வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறையின் செயலர் வே.ராஜாராமன், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் சுதா சேஷய்யன், இயக்குநர் இரா. சந்திரசேகரன், பதிவாளர் ரெ. புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.