பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தத்திற்கு கைது வாரண்ட்!

வரதட்சணை மோசடி வழக்கில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு, கைது வாரண்ட் பிறப்பித்து கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வரும் 27 ஆம் தேதி ஏபி முருகானந்தத்தை ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பாஜக நிர்வாகி ஏபி முருகானந்தம் மீது பதிவு செய்யப்பட்ட வரதட்சணை மோசடி வழக்கில், பல முறை விசாரணைக்கு அவர் ஆஜராகாத நிலையில், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஞானசெளந்தரி என்பவரை திருமணம் செய்த ஏ.பி.முருகானந்தம், 1.5 ஏக்கர் நிலம், 60 சவரன் நகை, ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாக பெற்றுள்ளார். சில மாதங்களில் ஞானசெளந்தரி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், ஞானசௌந்தரியின் தந்தை, தனது மகளுக்கும் முருகானந்தத்திற்கும் திருமணமாகி குழந்தைகள் இல்லை என்பதால் அதைக் காரணம் காட்டி, அடித்து கொடுமைப்படுத்தி தற்கொலை செய்யத் தூண்டியுள்ளதாக புகார் அளித்தார். சொத்துக்காக தனது மகளை திருமணம் செய்ததோடு, அதன்பிறகு அவரை துன்புறுத்தி கொன்றுவிட்டதாக அவர் போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும், திருமணத்தின்போது தான் வழங்கிய சீர்வரிசை பொருட்களை திரும்ப ஒப்படைக்கக் கோரி ஞானசௌந்தரியின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஏபி முருகானந்தம் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக சார்பில், திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஏபி முருகானந்தம் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியடைந்தார். கோவை இளைஞரணி மண்டல பொறுப்பில் துவங்கி மாவட்ட பொதுச்செயலாளர், மாநில பொதுச்செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினர், அகில இந்திய இளைஞரணி செயலாளர், இளைஞர் அணியின் அகில இந்திய துணைத் தலைவர் என ஏ.பி.முருகானந்தம் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.