அரசு பணிகளுக்கான போட்டி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்!

அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறினார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதற்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது வெளியிடுகிறது. போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் ஆவதாக டிஎன்பிஎஸ்சி மீது விமர்சனங்கள் இருந்துவந்த நிலையில், தற்போது நிலைமை அடியோடு மாறிவிட்டது. கடந்த ஜுன் 9-ம் தேதி சுமார் 16 லட்சம் பேர் எழுதிய ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வின் முடிவை 92 நாட்களில் வெளியிட்டு சாதனை புரிந்தது டிஎன்பிஎஸ்சி. மேலும், தேர்வு முடிந்த ஆறே நாளில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலையும் வெளியிட்டது.

மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த (நேர்முகத் தேர்வு பதவிகள்) தேர்வின் முடிவு 50 நாட்களில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், வரும் காலங்களிலும் இதே வேகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியதாவது:-

டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடிவு செய்துள்ளோம். தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்படும். அதேநேரம் தேர்வு முடிவுகள் துல்லியமாக இருப்பதும் உறுதிசெய்யப்படும். குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்கள் பங்கேற்ற தேர்வுகள் மற்றும் கணினி வழியிலான தேர்வுகளின் முடிவுகளையும் வெகுவிரைவாக வெளியிட முடியும்.

அந்த வகையில், அண்மையில் நடந்து முடிந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வின் (நேர்காணல் அல்லாதது) முடிவும், தற்போது நடைபெற்று வரும் டிப்ளமோ மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி கொண்ட தொழில்நுட்ப பணித் தேர்வின் முடிவும் விரைவாக வெளியிடப்படும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குருப்-2 மற்றும் குருப்-2ஏ தேர்வில் புதிதாக 213 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு காலியிடங்களின் எண்ணிக்கை 2,327-லிருந்து 2540ஆகஉயர்ந்துள்ளது. காலிப் பணியிடங்கள் தொடர்பாக அரசின் பல்வேறு துறைகளுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளோம்.

காலிப்பணியிடங்கள் வர வாய்ப்பிருப்பதால் குருப்-2, குருப்-2ஏ பணியிடங்கள் சற்று அதிகரிக்கக் கூடும். தேர்வு முடிவு வெளியிடுவதற்கு முன்பு காலியிடங்களைச் சேர்க்க முடியும். எனவே, குருப்-2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்பட இருப்பதால் கூடுதல் பணியிடங்களை சேர்க்க அதுவரை வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.