காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்!

“வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. கடற்கரைப் பகுதியில்தான் அது நிலவுகிறது. இது மெதுவாகவே கடந்து செல்லும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (நவ.12) செய்தியாளர்களைச் சந்தித்தாா். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 8 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைக்கு அருகே நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். இதன் காரணமாக அடுத்து வரும் நான்கு தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

நாளை (நவ.13) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. நவ.14-ம் தேதி கடலோர மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. நவ.15-ம் தேதி, தென்தமிழக மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல், வங்காள விரிகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 55 கி.மீட்டர் வேகத்திலும் அடுத்து வரும் இரு தினங்களுக்கு வீசக்கூடும். மீனவர்கள் இந்தப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்.1 முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில், பதிவான மழையின் அளவு 256 மி.மீட்டர். இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 259 மி.மீட்டர், இது இயல்பைவிட ஒரு சதவீதம் குறைவு.

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. கடற்கரைப் பகுதியில்தான் அது நிலவுகிறது. இது மெதுவாகவே கடந்து செல்லும். வானிலை என்பது தொடர் மாற்றத்துக்குரியது. கடந்த 7, 8 மற்றும் 9-ம் தேதி வரை, வங்கக் கடலின் வடபகுதிக்கும் தென்பகுதிக்கும் இடையில், வடபகுதியில் மேற்கு திசைக்காற்றும், தென் பகுதியில் கிழக்கு திசை காற்றும் சென்றிருக்கிறது. அதன்பிறகு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இவ்வாறு அவர் கூறினார்.