இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்து வருகிறது: சவூதி இளவரசர்!

போர் என்ற பெயரில் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை இஸ்ரேல் செய்வதாகவும், உடனடியாக போரை கைவிட வேண்டும். போரை கைவிடாத வரை இஸ்ரேலை அங்கீகரிக்க போவது இல்லை என்று சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு எதிராக கடந்த ஆண்டு இஸ்ரேல் போர் தொடங்கி நடத்தி வருகிறது. ஓராண்டை கடந்து போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் உள்ளது. இதனால் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் கொன்றுள்ளது. இந்த 2 அமைப்புகளும் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், ஈரானுக்குள் பறந்து முக்கிய இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் ஹமாஸ் – இஸ்ரேல் போர் என்பது லெபனான் – இஸ்ரேல், இஸ்ரேல் – ஈரான் மோதலாக உருமாறி நிற்கிறது.

இந்நிலையில் தான் காசா மீதான போர், லெபனான் மீதான தாக்குதல், ஈரானை குறிவைத்துள்ள செயல் உள்ளிட்டவற்றுக்க சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல் ஈரான் மீதான தாக்குதலை தடுக்க இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச சமூகங்கள் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது ரியாத்தில் நேற்று முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடந்தது. இதில் முகமது பின் சல்மான் பேசியதாவது:-

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்து வருகிறது. காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை என்பது இனப்படுகொலை செய்யும் வகையில் உள்ளது. சகோதரர்கள் வாழும் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலை சவூதி அரேபியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக செயல்படவிடாத வரை சவூதி அரேபியா, இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்காது. அதேபோல் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலையும் கண்டிக்கிறோம். இதுதவிர இஸ்ரேல் ஈரானை குறிவைக்கிறது. இதனை தடுத்து ஈரானின் இறையாண்மையை நிலைநாட்ட சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் – சவூதி அரேபியா இடையே தொடர்ந்து பிரச்சனை என்பது இருந்து வருகிறது. இருநாடுகள் இடையே நெருக்கமான உறவு என்பது இருந்தது இல்லை. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான மோதலும் ஒரு காரணமாகும். காசா மீதான போர், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைக்கு இஸ்ரேலுக்கு, அமெரிக்கா உதவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க சவூதி அரேபியா – அமெரிக்கா இடையே நல்ல உறவு தொடர்ந்து வருகிறது. இருநாடுகளும் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. அதேபோல் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே நெருங்கிய உறவு உள்ளது. இதனால் சவூதி அரேபியா – இஸ்ரேலை நட்பாக்க அமெரிக்கா முயன்றது. 2020-2021 காலக்கட்டத்தில் அமெரிக்கா இதற்கான ஸ்டெப்புகளை மேற்கொண்டது. இருநாடுகள் இடையேயும் நல்ல உறவை கொண்டு வர முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் முயன்றனர். இதனால் விரைவில் இருநாடுகள் இடையே சுமூக உறவு ஏற்படும் என்று நினைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் உருவாகி போர் தொடங்கியதால் இந்த ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதன்பிறகு இஸ்ரேலின் போர் நடவடிக்கையை தொடர்ந்து சவூதி அரேபியா கண்டித்து வருகிறது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் போர் நடவடிக்கையை கைவிட்டால் மட்டுமே நாங்கள் அங்கீகரிப்போம் என்று சவூதி அரேபியா தொடர்ந்து கூறி வருகின்றன. அதனை மீண்டும் ஒருமுறை சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று உறுதி செய்துள்ளார்.