அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து: துணை முதல்வர் உதயநிதி நேரில் விசாரணை!

சென்னையில் அரசு மருத்துவர் மீது கத்திக்குத்து நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த மருத்துவரை துணை முதல்வர் உதயநிதி நேரில் சந்தித்தார். தொடர்ந்து பேசிய உதயநிதி, சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியுள்ளார்.

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் கேன்சர் பிரிவில் மருத்துவராக உள்ள பாலாஜியை இன்று காலை விக்னேஷ்வரன் என்ற நபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாய்க்கு உரிய சிகிச்சையை தரவில்லை என்பதால் அவர் மருத்துவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கத்தியால் குத்தப்பட்ட அரசு மருத்துவரின் உடல்நிலை குறித்து துணை முதல்வர் உதயநிதி நேரில் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார். மருத்துவர் பாலாஜிக்கு 4 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 6 மாதங்களாக சிகிச்சையில் இருந்த தாயுடன் வருபவர் என்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்றும் தெரிவித்தார்.