சென்னையில் அதிக மழை பெய்தாலும் சமாளிக்க தயார்: அமைச்சர் கே.என்.நேரு!

சென்னையில் எவ்வளவு அதிக மழை வந்தாலும், அதை சமாளிக்க மாநகராட்சி தயாராக உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் கடந்த அக்.1 முதல் நவ.12-ம் தேதி வரை 43 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று 2.6 செ.மீ. பதிவாகியுள்ளது. இந்த மழையால் இதுவரை எந்த இடத்திலும் மழைநீர் தேக்கம் இல்லை. மாநகராட்சி சார்பில் 329 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இவற்றில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.

நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 120 மைய சமையல் கூடங்களும், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்கவைப்பதற்காக 103 படகுகளும் தயார் நிலையில் உள்ளன. மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,324 மோட்டார் பம்புகள் தயாராக உள்ளன.

நீர்வளத் துறையிடமிருந்து பராமரிப்புப் பணிகளுக்காக மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய 3 கால்வாய்களிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஓட்டேரி நல்லா கால்வாயில் 1000 டன் வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளது. 10 கிமீ நீளத்துக்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலை வெட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை நின்றவுடன் உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, எம்.கே.மோகன், ஜெ.கருணாநிதி, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.