மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக தாராவி இருக்கிறது. இந்த பகுதியை மறு சீரமைப்பு என்கிற பெயரில் அதானி வசம் ஒப்படைக்க பாஜக முயல்வதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பையின் வளர்ச்சிக்கு தமிழர்கள் கணிசமான பங்களித்துள்ளனர். வானம் தொடும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் கட்டிடங்களில் எல்லாம் தமிழர்களின் உழைப்பு இருக்கிறது. இன்றும் கூட அந்நகரின் வளர்ச்சிக்காக தங்களை தமிழ் மக்கள் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் வசிக்கும் தாராவி பகுதிக்கு போதுமான அடிப்படை வசதிகள் அரசால் வழங்கப்பட்டிருக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான். வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே தாராவி குறித்து அரசியல் கட்சிகள் பேசி வருகின்றன.
இப்படி இருக்கையில் தாராவியில் மறு சீரமைப்பு நடைபெறும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் இதில் அதானி குழுமமும் இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு முறை, சாமானிய மக்கள் வாழும் பகுதிகளை மறு சீரமைப்பு செய்வதாக சொல்லி, அந்த இடத்திலிருந்து அம்மக்கள் அப்புறப்படுத்தப்படுவது காலங்காலமாக நடந்து வருகிறது. தாராவியும் இந்த இதற்கு பலிகடா ஆகிவிடுமோ என்று கேள்வி எழுந்திருக்கிறது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எதிர்ப்பை பதிவிட்டுள்ளார். நவ.20ம் தேதி மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. எனவே இதற்காக இன்று நாந்தேட்டில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, தாராவியை அதானியிடம் ஒப்படைக்கப்போவதாக குற்றம்சாட்டியுள்ளார். “மகாராஷ்டிராவில் நடந்த ஆட்சி கவிழ்ப்பின் போது அதானி முக்கிய பங்கு வகித்திருந்தார். ஆட்சியை கவிழ்க்க நடந்த கூட்டத்தில் அதானி பங்கேற்றிருந்தார். இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்றதன் பின்னணியில் தாராவி வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. புதிய பொறுப்பேற்ற அரசு, தாராவியை அதானி வசம் ஒப்படைத்தது.
மகாராஷ்டிராவில் வேலையில்லா பிரச்னை உச்சத்தை தொட்டிருக்கிறது, விலைவாசி அதிகரித்திருக்கிறது. ஆனால், மறுபுறம் அதானி வசம் செல்வம் தொடர்ந்து குவிந்து வருகிறது. சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் அனைத்தும் அதானி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது எல்லாம் சேர்ந்து உள்ளூர் மக்களான உங்களுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று விமர்சித்துள்ளார்.
ஆனால் இந்த விமர்சனங்களில் உண்மை இல்லை என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மறுப்பு தெரிவித்திருக்கிறார். “பல கோடி ரூபாய் மதிப்பிலான தாராவி குடிசைப் புனரமைப்புத் திட்டம் ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும். ஆனால், இதை ராகுல் காந்தி வேண்டும் என்றே எதிர்க்கிறார். அவருக்கு ஏழைகளின் மீது அக்கறை கிடையாது. ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க காங்கிரஸ் விரும்புகிறது. தாராவி குறித்து ராஜீவ் காந்தி அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் 25 ஆண்டுகள் அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும் தாராவிக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. தாராவி மறுசீரமைப்பு திட்டம் என்பதை திரித்து, தாராவியை அதானி கையில் ஒப்படைக்கப்போவதாக ராகுல் போலி பிரசாரத்தை கையில் எடுத்திருக்கிறார். மறுசீரமைப்பு திட்டத்தின் முழு செயல்முறையும் வெளிப்படையானது. அதானி இந்த திட்டத்தின் ஓர் அங்கம் மட்டுமே” என்று பட்னாவிஸ் கூறியுள்ளார்.