நாட்டின் பாதுகாப்பில் முன்னிலை வகிக்கும் சீக்கியர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

நாட்டில் சீக்கியர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், மக்கள் சேவை, நாட்டின் பாதுகாப்பில் முன்னிலையில் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் 555-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீகுருநானக் சத்சங்க சபாவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மகன் ராகுல் ரவி, தென் இந்திய பகுதிகளுக்கான தலைமை படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், ஆளுநர் ரவி பேசியதாவது:-

சீக்கிய குருவான குருநானக் இலங்கை செல்வதற்கு முன்பு ராமேசுவரத்தில் தங்கியுள்ளார். அப்போது, எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என போதித்துள்ளார். குருநானக் போதித்தபடி, ‘அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும், அன்பு காட்ட வேண்டும், மனிதம் போற்ற வேண்டும்’ என்பது போன்ற கொள்கைகளை சீக்கியர்கள் பின்பற்றி வருகின்றனர். நாட்டில் சிறுபான்மையினராக இருந்தாலும், வணிகத்தை பிரதான தொழிலாக கொண்டாலும், சமூக சேவையில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளிலும், குறிப்பாக பேரிடர் காலங்களிலும் அவர்களது சேவை அளப்பரியது. இதுதவிர, நாட்டின் பாதுகாப்பிலும் முன்னிலை வகிக்கின்றனர். அவர்கள் மத வேற்றுமை பார்ப்பது இல்லை. அனைவரும் சமம் என்று கருதுகின்றனர். அதையே பின்பற்றுகின்றனர். நமது குருமார்களின் போதனைகளை நாம்தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கும் அவற்றை போதிக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.