ஜானகி நூற்றாண்டு விழா: எடப்பாடி பழனிசாமியுடன் விழா குழுவினர் ஆலோசனை!

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ஜானகியின் நூற்றாண்டு விழா, அதிமுக சார்பில் வரும் 24-ம் தேதி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்காக விழா குழுவும் அமைத்துள்ளார். அதில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வைகைசெல்வன், கட்சியின் கலைப்பிரிவு செயலாளர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த விழாவில் ஜானகி படத்திறப்பு, மலர் வெளியீடு, கவியரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக குழுவின் ஆலோசனைக் கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த நவ.13-ம் தேதி நடைபெற்றது. அப்போது, விழா மலரில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், கவியரங்கம், கருத்தரங்கில் பேசவிருக்கும் தலைப்புகள், பேச்சாளர்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் விழாக் குழுவினர் நேற்று சந்தித்து பேசினர். அவரிடம் விழா ஏற்பாடுகள் குறித்து விளக்கினர். விழாவுக்காக தயாரிக்கப்பட்ட இலட்சினையையும் பழனிசாமியிடம் காண்பித்தனர். பின்னர், விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்யுமாறு பழனிசாமி அறிவுறுத்தினார்.