டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீர் ராஜினாமா!

டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் கைலாஷ் கெலாட் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். அத்துடன் கட்சியில் இருந்தும் விலகினார்.

டெல்லியில் கடந்த 9 ஆண்டுகளாக ஆத் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. மதுபான கொள்கை நடைமுறையில் ஊழல் நடைபெற்றது தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜாமீனில் வெளியில் வந்த கேஜ்ரிவால், தனக்கு பதில் இளம் தலைவர் அதிஷியை முதல்வராக்கினார். டெல்லியில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று குற்றமற்றவன் என்று நிரூபித்த பிறகு முதல்வர் பதவியேற்பேன் என கேஜ்ரிவால் கூறினார்.

இந்நிலையில், ஆத் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி போக்குவரத்து துறை அமைச்சருமான கைலாஷ் கெலாட் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக ஆத் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, கைலாஷ் கெலாட் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மக்களுக்கு சேவை செய்யும் உணர்வை அரசியல் ஆசைகள் முந்திவிட்டன. ஆம் ஆத்மி அளித்த வாக்குறுதிகள் பலவற்றை நாம் நிறைவேற்றவில்லை. குறிப்பாக யமுனையை தூய்மைப்படுத்துவோம் என்று கூறினோம். அதை செய்ய முடியவில்லை. உண்மையில் யமுனை நதி முன்பைவிடவும் இப்போதுதான் மிகவும் மோசமானதாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சியைப் பற்றி பல சர்ச்சைகள் உள்ளன. இந்த கட்சி தற்போது சொந்த அரசியல் லாபத்துக்காக போராடி வருகிறது.

ஆம் ஆத்மி கட்சியில் சங்கடமான. மோசமான பல விஷயங்கள் நடக்கின்றன. அதனால் கட்சியை இனிமேலும் நம்பலாமா என்ற சந்தேகம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதற்கே பெரும்பாலான நேரத்தை ஆம் ஆத்மி அரசு செலவிடுகிறது. இந்த சூழ்நிலையில் டெல்லி உண்மையான வளர்ச்சியை பெற முடியாது. அதனால் ஆத் ஆத்மி கட்சியில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு இதை தவிர வேறு வழியில்லை. மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். இவ்வாறு கைலாஷ் கெலாட் கூறியுள்ளார்.

இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறும்போது, “டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலின் கொள்ளையடிக்கும் கும்பலில் இருக்க விரும்பவில்லை என்பதை கைலாஷ் கெலாட் தனது ராஜினாமா மூலம் தெளிவுபடுத்தி உள்ளார். அவர் மிக துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறார். அதை நாங்கள் வரவேற்கிறோம்” என்று பாராட்டியுள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் கைலாஷ் கெலாட்டுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் மோதல் எல்லாம் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. மதுபான ஊழல் வழக்கில் கேஜ்ரிவால் சிறையில் இருந்தார். அப்போது, ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லி அரசின் சார்பில் சுதந்திர தின விழாவை, கல்வித் துறை அமைச்சராக இருந்த அதிஷி (தற்போது முதல்வராக பதவி வகிக்கிறார்) முன்னின்று நடத்துவார் என்று சிறையில் இருந்தபடியே கேஜ்ரிவால் அறிவித்தார். இது ஆம் ஆத்மி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

எனினும், இந்த விவகாரத்தில் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தலையிட்டு கேஜ்ரிவால் உத்தரவை ரத்து செய்தார். அதிஷிக்கு பதில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் சுதந்திர தின கொடியேற்றுவார் என்று அறிவித்தார். டெல்லி போலீஸ் துறையை உள்துறைதான் கவனிக்கிறது என்பதால் ஆளுநரின் முடிவு நியாயமானதாக கூறப்பட்டது.

அதேநேரத்தில் ஆளுநரின் முடிவால் கேஜ்ரிவாலுக்கும் கைலாஷ் கெலாட்டுக்கும் இடையில் அப்போதே மோதல் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைலாஷ் வசம் இருந்த சட்டத்துறை இலாகாவை பறித்து அதிஷியிடம் ஒப்படைத்தார் கேஜ்ரிவால். இதுவும் கைலாஷ் கெலாட்டுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

டெல்லி சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கைலாஷ் கெலாட்டின் ராஜினாமா மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.