காலியாக உள்ள 2,553 மருத்துவ பணியிடங்களுக்கு ஜன. 27-ல் ஆன்லைன் தேர்வு!

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவப் பணியிடங்களுக்கு ஜனவரி 27-ம் தேதி ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்திலேயே முதல்முறையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் ,செவிலியர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் `பிங்க் சோன்’ எனப்படும் 5 தனி ஓய்வறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, நெல்லையில் ரூ. 72 கோடியில் 450 படுக்கைகள், 10 அறுவைசிகிச்சை அரங்குகள் கட்டும் பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்.

காலியாக உள்ள 1,353 மருத்துவர் பணியிடங்கள் மற்றும் 2026-ம் ஆண்டு வரை தேவைப்படும் மருத்துவர் பணியிடங்கள் என 2,553 காலி பணியிடங்களுக்கு 24 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதற்கான தேர்வுகள் வரும் ஜனவரி 27-ம் தேதி நடைபெற உள்ளன. பெரிய நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் இந்த தேர்வுகள் நடைபெறும். மேலும், 2,250 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்