டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் கைலாஷ் கெலாட் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்த நிலையில், இன்று அவர் பாஜகவில் இணைந்தார்.
டெல்லி பாஜக அலுவலகத்துக்கு வந்த அவர், மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். பூங்கொத்து கொடுத்து அவர் வரவேற்கப்பட்டார். இதனையடுத்து, மனோகர் லால் கட்டார் அவருக்கு கட்சியின் உறுப்பினர் சீட்டை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், “டெல்லியின் முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி அரசின் மூத்த அமைச்சராக இருந்தவர் பாஜகவில் இணைந்தது டெல்லி அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். பா.ஜ.,வில் சேரும் முடிவை எடுப்பதற்கு முன், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வின் பணியை நிச்சயம் அவர் பார்த்திருப்பார். அவரை கட்சிக்கு வரவேற்கிறேன்” என குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய கைலாஷ் கெலாட், “இந்த முடிவு யாரோ ஒருவரின் அழுத்தம் காரணமாக ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு என்று சிலர் நினைக்கக் கூடும். ஆனால், இன்றுவரை யாருடைய அழுத்தம் காரணமாகவும் நான் எதையும் செய்ததில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தந்த அழுத்தத்தில் இது நடந்தது என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஆனால் அது தவறு.
டெல்லி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தேன். ஆம் ஆத்மி கட்சியில் நாங்கள் எதற்காக சேர்ந்தோமோ அந்த நோக்கங்கள் அனைத்தும் என் கண் முன்னே மதிப்பிழந்து கொண்டிருந்தன. இவை என் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் லட்சக்கணக்கான ஆம் ஆத்மி கட்சியினரின் குரல் இருக்கிறது என்பதற்கு என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். எளிய மக்களுக்கு சேவை செய்ய நினைத்தவர்கள், இப்போது வசதிபடைத்தவர்களாக ஆகிவிட்டனர்” என குற்றம் சாட்டினார்.
டெல்லி உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான கைலாஷ் கெலாட், 2015 முதல் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அவர், அதற்கு முன்பாக உள்துறை, நிர்வாக சீர்திருத்தங்கள், தகவல் தொழில்நுட்பம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, நிதி மற்றும் வருவாய் ஆகிய துறைகளுக்கும் அமைச்சராக இருந்தார்.
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங், “பாஜக மோசமான அரசியலில் ஈடுபடுகிறது. கைலாஷ் கெலாட்டுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் சிபிஐ மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இனி அவர் பாஜக சொல்படி நடப்பார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ‘மோடி வாஷிங்மெஷின்’ செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல தலைவர்கள் பாஜகவில் சேருவார்கள்” என்று குற்றம் சாட்டினார்.
இதனிடையே, கைலாஷ் கேலாட் பாஜகவில் இணைந்ததால் அரவிந்த் கேஜ்ரிவால் அச்சமடைந்திருப்பதாக டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கைலாஷ் கெலாட் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறித்து அரிவிந்த் கேஜ்ரிவால் விரிவாக எதையும் பேசவில்லை. இதற்குக் காரணம், பல ரகசியங்களை அவர் அம்பலப்படுத்திவிடுவார் என்ற அச்சம்தான். அதனால்தான் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான கேஜ்ரிவால் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. அச்சம் காரணமாக கேஜ்ரிவால் கேள்விகளை தவிர்க்க முனைகிறார் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது” என விமர்சித்துள்ளார்.