லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் ரூ.12.41 கோடி பறிமுதல்!

லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இதற்கிடையே இந்த சோதனையில் ரூ. 12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ரூ. 6.42 கோடி வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

கோவை அடுத்துள்ள துடியலூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீட்டில் அமலாக்கத் துறை அதிரடி ரெய்டு நடத்தினர். அதிகாலையிலேயே இரு கார்களில் மார்ட்டின் வீட்டுக்கு வந்த அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். மார்டினின் மருமகனும் விசிக துணை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனனின் சென்னை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதற்கிடையே லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டு குறித்து அமலாக்கத் துறை விளக்கமளித்துள்ளது. மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ. 12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, மேகாலயா என மொத்தம் 22 இடங்களில் நடந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் ரூ.6.42 கோடி வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை தனது ட்விட்டரில் மேலும் கூறுகையில், “சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டலுக்கு எதிரான பண மோசடி வழக்கு விசாரணை தொடர்பாகத் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 22 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை செய்தது. இந்த சோதனையில்​​பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், ரூ. 12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டன. அதனுடன் ரூ. 6.42 கோடி வைப்பு நிதியும் முடக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.