டெல்லியில் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை: உச்ச நீதிமன்றம்!

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி டெல்லி அரசு ஏற்கெனவே 10 மற்றும் 12 -ம் வகுப்பு தவிர மற்ற மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகளை நடத்த தடைவிதித்துள்ளது. மேலும், அவர்களுக்கான வகுப்பு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசை கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் ஜார்ஜ் மாசிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியதாவது:-

டெல்லியில் காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமையன்று இந்த சீசனில் மிகவும் மோசமான அளவாக 486-ஆக அதிகரித்துள்ளது. காற்று மாசை கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்காத டெல்லி அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. தொடர்ந்து இரண்டாவது நாளாக காற்றின் தரக் குறியீடு தீவிர பாதிப்பு நிலையில் தொடர்கிறது.

இதனை கருத்தில் கொண்டு, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. அவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைனில் பாடம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் கிராப் 4 விதிமுறைகளை டெல்லி அரசு எந்த காரணத்தை கொண்டும் தளர்த்தக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.