சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றி இருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று (நவ.20) செய்தியாளர்களைச் சந்தித்த மைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது:-
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்றது. வேறு எந்த அரசும் எடுக்காத அளவுக்கு தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து இருக்கிறது. நீதிமன்றத்தில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து விரிவான வாதத்தை இந்த விசாரணையில் வழக்கறிஞர்கள் எடுத்து வைத்தனர். எனினும், இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிபிஐ என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடியது. இவ்வாறு விசாரணையை மாற்றி இருப்பது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும். தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட ஆலோசகர்களோடு தமிழக முதல்வர் ஆலோசித்து நல்ல முடிவை எடுப்பார். சிபிசிஐடி விசாரணையே சரி என்று நிரூபிக்கும் அளவுக்கு எங்களிடம் ஆதாரம் உள்ளதால் மேல்முறையீட்டில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இதன்பிறகு இது குறித்து சிபிஐ முதலில் இருந்து விசாரிக்கத் தொடங்கினால் காலதாமதம்தான் ஏற்படும். கள்ளச் சாராயத்தை தடுக்கத் தவறியதாக சில அலுவலர்கள் இடமாற்றம், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எனினும், நீண்ட காலத்துக்கு அவர்களே அப்படியே வைத்திருக்க முடியாது. பணி வழங்கித்தான் ஆக வேண்டும் என்பதுதான் விதி. கள்ளக்குறிச்சி மக்கள் தமிழக அரசு மீது திருப்தியாக இருக்கிறார்கள். ஆகையால், இந்தத் தீர்ப்பு வரும் தேர்தல்களில் எவ்வித பின்னடைவையும் அரசுக்கு ஏற்படுத்தாது. சில அரசியல் கட்சிகள் காழ்ப்புணர்ச்சியினால் வழக்கு தொடர்ந்துள்ளார்களே தவிர ,வேறு எந்த காரணமும் இல்லை.
நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து அரசு வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் ஆசிரியர் குத்திக் கொலை செய்யப்படுவது போன்ற சம்பவங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்களையும் எதிர்த்து சென்னையில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டற்காக என்னை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்து இருக்கிறார். மத்திய அரசை எதிர்த்து கருத்து தெரிவிக்கக் கூடாது என்று கூறுவது தவறு. கடந்த 2016 -ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முழு மதுவிலக்கைக் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்த திமுகவை மக்கள் ஆதரிக்கவில்லை. எனவே, வரும் தேர்தலில் மதுவிலக்கு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மதுக்கடை தேவையா, இல்லையா என்பது அந்தந்த பகுதி மக்களின் விருப்பத்தைப் பொறுத்ததுதான். வேண்டும் என்போரையும், வேண்டாம் என்போரையும் திருப்தி படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.அதே சமயம், தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியம் இல்லை. இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தில் திமுகவுக்கு எதிரிகள் யாரும் இல்லை. அதற்காக யாரும் எதிர்த்து நிற்கமாட்டார்கள் என்று கூற முடியாது. வரும் தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதற்காகவே தற்போதே பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளோம். அதிமுக என்ற ஒரு கட்சி சுக்கு நூறா நொறுங்கி விட்டது. அதற்கு சான்றுதான் அக்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.