ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மற்றும் நக்சல் பாதித்த பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் வன்முறையை அரசு 70 சதவீதம் கட்டுப்படுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் 50-வது அகில இந்திய காவல்துறை அறிவியல் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது:-
வரும் 10 ஆண்டுகளில் இந்திய குற்றவியல் நீதி அமைப்பு உலகில் மிகவும் அறிவியல் பூர்வமாகவும், வேகமானதாகவும் மாற்றப் போகிறது. காஷ்மீர், வடகிழக்கு மற்றும் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பல ஆண்டுகளாக தொந்தரவாக இருந்து வருகின்றன. இந்த 3 பிராந்தியங்களிலும் பாதுகாப்பு அடிப்படையில் நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். கடந்த 10 ஆண்டு கால தரவுகளை, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தப் பிராந்தியங்களில் வன்முறையை 70 சதவீதம் குறைப்பதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம், நாட்டில் உள்ள எந்தவொரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டதில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் மக்களுக்கு நீதி வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் அமித் ஷா கூறினார்.