சீன பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை!

ஆசியான் மாநாட்டில் பங்கேற்க லாவோஸ் சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சீன வெளியுறவு அமைச்சருடன் டோங் ஜுனுடன் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில் புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகள் இதன் சிறப்பு உறுப்பினர்களான (பேச்சுவார்த்தை கூட்டாளிகள்) உள்ளன. ஆசியான் அமைப்புக்கு இந்த ஆண்டு லாவோஸ் தலைமை வகிக்கிறது. அந்த வகையில் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் 3 நாள் மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியன் நகரில் நேற்று தொடங்கியது.

இதில் இந்தியா சார்பில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டுக்கு இடையில் சீன வெளியுறவு அமைச்சருடன் டோங் ஜுனுடன் ராஜ்நாத் சிங் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினார்.

கிழக்கு லாடக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவம் இடையிலான மோதலுக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு இரு நாட்டு வீரர்களின் ரோந்துப் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது.

இந்தியா – சீனா இடையே பல வாரங்களாக ராஜ்ஜிய மற்றும் ராணுவ அளவில் நடந்த பேச்சு வார்த்தையின் விளைவாக தேப்சாங், டாம்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இரு நாடுகள் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி படை விலக்கல் நடவடிக்கை கடந்த மாதம் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது இரு நாடுகள் இடையே பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.