மர்ம நபர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கானா பாடகி இசைவாணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் “ஐ யம் சாரி ஐயப்பா” என்ற விழிப்புணர்வு பாடலை பாடியதற்காக தற்போது செல்போனில் தொடர்பு கொண்டு மர்ம நபர்கள் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் இசைவாணி புகார் அளித்துள்ளார்.
கார்த்திகை மாதம் பிறந்தாலே அய்யப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து மலைக்குச் செல்வது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வருகின்றனர். ஐயப்பனை தரிசிக்க பெண்களை அனுமதிக்குமாறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. பலகட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, பெண்களும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து குறைவான பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல கானா பாடகி இசைவானி கடந்த 2019 ஆம் ஆண்டு ‘ஐ யம் சாரி ஐயப்பா’ என்ற பாடலை பாடி இருந்தார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சியில், ஐயப்பனை தரிசிக்க பெண்கள் வந்தால் தப்பா என கேட்கும் விதமாக, “ஐ எம் சாரி ஐயப்பா.. உள்ளே வந்தா தப்பாப்பா” என்ற பாடலைப் பாடினார் கானா பாடகி இசைவானி. இந்தப் பாடல் பெரிய அளவில் வைரலானது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்றார் இசைவானி. தொடர்ந்து, வெளிநாடுகளுக்கும் சென்று பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடல் பாடியுள்ளார் இசைவானி.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் சீசன் தொடங்கியுள்ள நிலையில் தற்போது இசைவாணி பாடிய ‘ஐ யம் சாரி ஐயப்பா’ பாடலுக்காக அவரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்து கடவுளை இழிழுபடுத்தி ஐயப்ப பக்தர்களின் உணர்வை சீண்டும் விதமாக இசைவாணி பாடியுள்ளதாக சமூக வலைதளங்களில் கடுமையாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஐய்யப்ப பக்தர்கள் போலீசிலும் புகார் அளித்துள்ளனர். இந்தப் பாடல், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் கானா பாடகி இசைவாணி, நீலம் கலாச்சார மையத்தை நடத்தும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் கானா பாடகி இசைவாணி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மர்ம நபர்கள் தனக்கு செல்போன் வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பதாக கானா பாடகி இசைவாணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் “ஐ யம் சாரி ஐயப்பா” என்ற விழிப்புணர்வு பாடலை பாடியதற்காக தற்போது செல்போனில் தொடர்பு கொண்டு மர்ம நபர்கள் அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் இசைவாணி புகார் அளித்துள்ளார்.