வங்கதேசத்தில் இந்து சமூகத்தினர் எதிர்கொள்ளும் கொடுமைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சின்மோய் கிருஷ்ண பிரபு என்ற இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி கைது செய்யப்பட்டதற்கு கோவை ஈஷா யோகா மைய நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களும் வன்முறைகளும் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதனையடுத்து வங்க தேசத்தில் இந்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் வங்கதேச இந்து மதத் தலைவர் கிருஷ்ணதாஸ் பிரபு, திங்கள்கிழமை டாக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கிருஷ்ணதாஸ் கைது குறித்து வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதற்கிடையே சின்மோய் கிருஷ்ண பிரபு கைது செய்யப்பட்டதற்கு கோவை ஈஷா யோகா மைய நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளதாவது:-
மதம் அல்லது மக்கள் தொகை பலவீனத்தின் அடிப்படையில் நடக்கும் ஒடுக்குமுறை ஜனநாயக நாடுகளின் வழி அல்ல ஒரு ஜனநாயக நாடு எவ்வாறு சிதைந்து மதவாத மற்றும் சர்வாதிகார நாடாக மாறுகிறது என்பதை பார்க்க மோசமானதாக உள்ளது. சுதந்திரமான ஜனநாயகத்தின் மதிப்புகளை புரிந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு. மதம் அல்லது மக்கள் தொகை பலவீனத்தின் அடிப்படையில் நடக்கும் ஒடுக்குமுறை எந்தவிதத்திலும் ஜனநாயக நாடுகளின் வழி அல்ல. துரதிருஷ்டவசமாக, நமது அண்டை நாடு ஜனநாயக கொள்கைகளில் இருந்து விலகி விட்டது.
அனைத்து குடிமக்களுக்கும் தேவையான உரிமைகள் மற்றும் அவரவர் தேவை மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வாய்ப்புடன் இருக்கும் ஒரு ஜனநாயக நாட்டினை கட்டமைப்பது ஒவ்வொரு வங்கதேச குடிமகனின் பொறுப்பாகும். வங்கதேசத்தில் மத சிறுபான்மையினராக இருந்து வரும் இந்து மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை மற்றும் ஒடுக்குமுறை சம்பவங்களை எதிர்த்தும், அனைவரும் சமய உரிமையோடு வாழ தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் வங்கதேசத்தின் வெறும் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. நம் அண்டை நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்காக நாம் உறுதியாக நின்று விரைந்து செயல்படாவிட்டால், பாரதம் மஹா-பாரதமாக இருக்க முடியாது.
இந்த நாட்டின் அங்கமாக இருந்தது, துரதிர்ஷ்டவசமாக அண்டை நாடாகிவிட்டது. ஆனால் நிஜத்தில் இந்த நாகரிகத்தைச் சேர்ந்த இம்மக்களை, இத்தகைய அதிர்ச்சியான கொடுமைகளிலிருந்து பாதுகாப்பது நம் பொறுப்பு நம் அண்டை நாட்டின் துரதிர்ஷ்டவசமான நிதர்சனம். மதத் தீவிரவாதம் நம் அன்பான பாரதத்தை ஒருபோதும் ஆட்டிப்படைக்காதவாறு நாம் உறுதி செய்வோம். வங்கதேசம் முழுவதும் நடைபெற்று வரும் கும்பல் வன்முறை, தீ வைப்பு, இந்து கோவில்கள் தகர்ப்பு மற்றும் இழிவுபடுத்தும் சம்பவங்கள், அமைப்பு ரீதியாக ஓரங்கட்டப்படுதல் போன்றவை மனிதாபிமான பிரச்சனை மற்றும் ஜனநாயக மதிப்புகள் முற்றிலும் சிதைந்து வருவதை காட்டுகிறது. அங்கு சிறுபான்மை சமூகங்கள் அச்சுறுத்தல், இடப்பெயர்வு மற்றும் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன. திருவிழாக்கள் மற்றும் மதக் கூட்டங்கள் வன்முறைக்கு இலக்காகிவிட்டதால், பலர் தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படையாக கடைப்பிடிக்க பயப்படுகிறார்கள். இந்த அராஜக செயல்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சின்மோய் கிருஷ்ண பிரபு கைது செய்யப்பட்டிருப்பது, வளர்ந்து வரும் சகிப்புத்தன்மையற்ற சூழலையும், அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கையின் அவசரத் தேவையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.