காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, 29ஆம் தேதி வரை கடற்கரையை ஒட்டியே நகரும்: பாலச்சந்திரன்

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் என்றும், இது எப்போது, எங்கே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்படவில்லை எனவும் தென்மண்டல ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாளை பயுலாக வலுப்பெற்று, 29ஆம் தேதி வரை புயலானது 150 முதல் 250 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரைக்கு இணையாக நகரும் என்று பாலச்சந்திரன் கூறியிருக்கிறார்.

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள், அதனை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய புயல் சின்னம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை – திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 800 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும். இது அதற்கடுத்த இரு நாள்களில் மேலும் வடக்கு – வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை அய்வு மையம் கூறியிருக்கிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை இன்று சந்தித்த பாலச்சந்திரன் கூறியதாவது:-

புயலின் மையப் பகுதியாக இருந்தாலும் அது கரையை ஒட்டியிருக்கும் போது, அதன் பாதை, மழை அளவு தொடர்ந்து கணிக்கப்படும். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெறும். மேற்குப் பகுதியில் பார்க்கும்போது மேகக் கூட்டம் உருவாகி வருகிறது. தற்போது வரை இந்தப் புயல் சின்னம் கரையைக் கடப்பது கணிக்கப்படவில்லை. தொடர்ந்த புயல் சின்னத்தை கண்காணிக்கிறோம். இது வடமேற்கு திசையில் கரைக்கு இணையாக நகர்ந்து 250 கி.மீ. தொலைவில் நிலைகொள்ளும்.

அப்போது கடலுடைய வெப்பநிலை 28 டிகிரியில் இருந்தால் சாதகமான நிலை ஏற்படும். புயல் சின்னத்தின் கீழே குவிதல், மேலே விரிதல் அதிகமாக உள்ளது. இவை ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது புயல் சின்னம் வலுவடைந்துவிடும். ஆனால், காற்றின் திசையும் வேகமும் மாறும்போது மேகக் கூட்டங்கள் பிரிந்துபோகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இங்கு பிரிவதற்கான வாய்ப்பு குறைவுதான். சென்னையிலிருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் புயல் சின்னம் உள்ளது. அதுபோல, புயல் சின்னத்தின் வேக மாறுபாடு சாதகமாக உள்ளது.

பல காரணிகளின் சாதகமான சூழல் உள்ளதால் புயலாக வலுப்பெறும். ஆனால் எங்கு கரையை கடக்கும், எப்போது கரையை கடக்கும் என்று இதுவரை கணிக்கப்படவில்லை. நாளை புயலாக மாறி, 29ஆம் தேதி வரை 150 முதல் 250 கிலோ மீட்டர் தொலைவிலேயே கடற்கரைக்கு இணையாக நகர்ந்து செல்லும் என்று தெரிவித்துள்ளார்.