மத்திய அரசு உடனே தலையிட்டு வங்கதேசத்தில் இந்துக்களை பாதுகாக்க வேண்டும்: இந்து முன்னணி!

வங்கதேசத்தில் தொடர்ந்து சிறுபான்மை இந்துக்களின் மீது தாக்குதல் நடந்து வருகிறது. மத்திய அரசு உடனே தலையிட்டு இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

வங்கதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு இட ஒதுக்கீடு சம்பந்தமான மாணவர்கள் போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. பிறகு அந்தப் போராட்டம் அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதலாக வடிவெடுத்து, மாபெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் கலவரமாக வெடித்தது. இந்துக்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. இந்துக்கள் பொதுவெளியில் தாக்கப்பட்டனர். இந்து பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர் . அங்கே இந்துக்கள் வாழவே வழியின்றி ஒடுக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறின.

கலவர நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகும் கூட மீண்டும் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது மதரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வன்முறையாளர்களை அடையாளம் காண வேண்டும் என குரல் கொடுத்து அமைதி வழியில் போராட்டம் நடத்திய இஸ்கான் அமைப்பின் சன்யாசி சின்மோய் கிருஷ்ண பிரபு வங்கதேச காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத படி தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் நடைபெறும் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்தி வன்முறையாளர்களை அடையாளம் காண வேண்டும் என கூறியவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்திருப்பது வங்கதேசத்தின் அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது.

அவரை நீதிமன்றத்திற்கு கொண்டுவரும் வழியில் ஏற்பட்ட கலவரத்தில் பல இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சன்யாசியை ஜாமினில் எடுக்க முன்வந்த வழக்கறிஞரும் மத பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மீண்டும் இந்துக்கள் மீது வன்முறையாளர்கள் கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

வங்கதேசத்தின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கு அளவிடமுடியாததாகும். இந்திய வங்கதேசத்தின் பொருளாதாரப் பரிவர்த்தனைகள் நன்றாக நடந்து கொண்டிருந்த வேளையில் மாணவர் போராட்டத்தை மதக் கலவரமாக மாற்றி சிறுபான்மை இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறின. வங்கதேசத்தின் இந்த சர்வாதிகாரப் போக்கு அங்குள்ள இந்துக்களை மிகவும் பாதிப்படையை செய்துள்ளது. மதப் பிரிவினைவாதிகளால் நடத்தப்படும் இந்த கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்துக்களை பாதுகாக்க வேண்டும்.

நமது தேசத்தில் உள்ள ஆன்மீக அமைப்புகள் அரசியல் கட்சிகள் சமுதாய அமைப்புகள் ஒன்றாக இணைந்து வங்கதேசத்தில் நடைபெறும் கலவரத்திற்கு எதிராக கடுமையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும். அமைதியான வழியில் போராட்டம் நடத்திய இஸ்கான் தலைவரை பாரத நாட்டோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக தேச துரோக வழக்கு பதிவு செய்ததை உடனடியாக வங்கதேச அரசு வாபஸ் பெற வேண்டும் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.