அடுத்த முதல்வர் தொடர்பாக மோடி, அமித் ஷா முடிவுக்கு கட்டுப்படுவோம்: ஏக்நாத் ஷிண்டே!

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், தானே நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தின் தற்காலிக முதல்வரான ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் நாங்கள் கடுமையாக உழைத்தோம். தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன் நாள்தோறும் 2-3 மணி நேரமே நான் தூங்கினேன். மாநிலம் முழுவதும் விரிவான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டேன். நான் எப்போதும் தொழிலாளியாக கருதியே பணியாற்றி வருகிறேன். என்னை முதல்வராக கருதவில்லை. சிஎம் என்றால் காமன் மேன் என்றே கருதுகிறேன். புகழ்பெற வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம். மக்கள் படும் வேதனையை, அவர்கள் தங்கள் வீட்டை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அறிந்தவன் நான். எனது ஆட்சிக் காலத்தில், நான் முதல்வராக ஆன ஆறு மாதங்களில் மகாராஷ்டிராவை 3-ம் இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு கொண்டு வந்தோம்.

இந்த தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்காக, அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் அன்புக்குரிய சகோதரிகள், சகோதரர்கள், விவசாயிகள் என அனைவருக்கும் நன்றி. சிவ சேனாவின் சாதாரண தொண்டனும் முதல்வராக வேண்டும் என்பது பால் தாக்கரேவின் கனவு. அந்த வகையில் 2.5 வருடங்கள் முதல்வராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அந்தக் கனவை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் நிறைவேற்றினார்கள். அவர்கள் எனக்குப் பின்னால் பாறையைப் போன்று உறுதியாக நின்றார்கள். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது எனக்கு ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மகாயுதி கூட்டணியில் இருந்து யார் முதல்வராக தேர்வு செய்யப்பட்டாலும் அவருக்கு சிவ சேனா ஆதரவு அளிக்கும். இது தொடர்பாக நான் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரிடம் நேற்று (நவ. 26) தொலைபேசியில் பேசினேன். அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்யச் சொன்னேன். அந்த முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்று அவர்களிடம் உறுதியளித்தேன். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் என்னால் எந்த சிக்கலும் எழாது; அதுபற்றி உங்கள் மனதில் எந்த சந்தேகமும் வர வேண்டாம்; நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் அந்த முடிவை பாஜகவினர் எப்படி ஏற்றுக்கொள்வார்களோ அதேபோன்று நாங்களும் ஏற்றுக்கொள்வோம் என்று கூறினேன். நீங்கள்தான் எங்கள் குடும்பத் தலைவர் என்றும் கூறினேன். எனவே, மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வரை நியமிக்கும் பாஜகவின் முடிவை சிவசேனா முழுமையாக ஆதரிக்கும். எங்கள் தரப்பில் எந்த வேகத்தடையும் இருக்காது என தெரிவித்தார்.

முதல்வராக நீங்கள் தொடர விரும்புகிறீர்களா, அது தொடர்பாக தெரிவித்தீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஏக்நாத் ஷிண்டே, “நான் ஏமாற்றம் அடையவில்லை. நாங்கள் போராடுகிறோம். நாங்கள் அழவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே, “ஏக்நாத் ஷிண்டே எனக்கு மிகவும் நல்ல நண்பர். அவர் கடந்த 2.5 ஆண்டுகளாக மகாராஷ்டிராவை மேம்படுத்தும் பணியில் சிறப்பாகச் செயல்பட்டார். அவரது தலைமையில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். அதனால் அமோக வெற்றியைப் பெற்றோம். பாஜக 132 இடங்களைப் பெற்றது. அதோடு, 7 எம்எல்ஏக்கள் புதிதாக பாஜகவில் இணைந்துள்ளனர். எனவே பாஜகவுக்கு இப்போது 139 இடங்கள் உள்ளன. ஏக்நாத் ஷிண்டேவுக்கு 41 இடங்கள் உள்ளன. தன்னை முதல்வராக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே விடுத்த கோரிக்கை சரியானதே. இதுவரை எனக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், மூன்று தலைவர்களும் (ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார்) டெல்லியில் அமித் ஷாவைச் சந்தித்து, இன்று இரவுக்குள் முதல்வர் பெயர் தொடர்பாக இறுதி முடிவெடுத்து அறிவிப்பார்கள்” என்று தெரிவித்தார்.