மறைமலை அடிகள் பேத்திக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்!

மறைமலை அடிகளாரின் பேத்திக்கு தமிழக அரசு சார்பில் புதிய வீட்டுக்கான ஆணையை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வழங்கினார்.

தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளின் மகன் வழிப் பேத்தி லலிதா(43), தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் ரா.செந்தில்குமார்(52), மாவு மில் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், வாடகை வீட்டில் வசித்து வரும் லலிதா, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவில், தான் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், வருமானம் இல்லாததால் வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்படுவதாகவும், அரசு சார்பில் வீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அய்யனார்கோவில் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் லலிதாவுக்கு இலவசமாக வீடு வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், ரூ.8.23 லட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கான ஆணை மற்றும் வீட்டுக்கான சாவியை லலிதாவிடம் அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.

இதுகுறித்து லலிதா கூறும்போது, ‘‘எனது குடும்ப நிலையை அறிந்து உடனடியாக வீடு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்’’ என்றார்.

இந்நிகழ்வில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.அரவிந்த், ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு.பாலகணேஷ், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.