பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அளிக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுகவில் இருந்து அமமுக சென்று திமுவில் இணைந்தார். செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி கடந்த ஆண்டு கைது செய்தனர். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓராண்டை தாண்டி அவர் சிறையில் இருந்த நிலையில் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சி.ஆர். மலர்வண்ணன், செந்தில் பாலாஜியிடம் பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அளிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாக கூறினார். இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ஆவணங்களின் நகல் சிறப்பு நீதிமன்றத்தின் வசம் தான் இருப்பதாகவும், அங்கிருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டுமென கூறினார்.
இதையே, பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதனிடையே, ஆவணங்களின் நகல் கிடைக்கும் வரை தடயவியல் துறை கணினிப் பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனுக்கு பதிலாக அடுத்த சாட்சியிடம் விசாரணை நடத்தலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இது குறித்து அடுத்த விசாரணையின் போது தெரிவிப்பதாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார்.