ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்றவர்கள் கொச்சைப்படுத்துவது சரியல்ல: நடிகை கஸ்தூரி!

சுவாமி ஐயப்பன் குறித்து இசைவாணி அவதூறாக பாடிய பாடலை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் எனவும், ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்றவர்கள் கொச்சைப்படுத்துவது சரியல்ல என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பாடகியான இசைவாணியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரபல இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மைய இசைக் குழுவான கேஸ்ட்லஸ் கலெக்டிவ் குழுவில் பாடகியாய் இருக்கிறார் இசைவாணி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் அவர் பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வரும் நிலையில் ’ஐ எம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா” என இசைவாணி பாடிய பாடல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல தடை உள்ள நிலையில் அது தொடர்பாகவே இசைவாணி பாடிய பாடல் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதை அடுத்து கோவை சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் கூறியிருந்தார். அதே நேரத்தில் இசைவாணி 5 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடலை வைத்து வேண்டுமென்றே சர்ச்சைகள் கிளப்பப்படுவதாக அவர் தரப்பு கூறுகிறது. மேலும் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக இசைவாணி கூறியிருந்தார்.

இந்நிலையில், இசைவாணி பாடலை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் எனவும், ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்றவர்கள் கொச்சைப்படுத்துவது சரியல்ல என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

நான் தலைமறைவாக இருந்தேன் என்பது உண்மையல்ல. கடந்த நான்கு வருடங்களாக ஹைதராபாத்தில் தான் வசித்து வருகிறேன். என் மகன் அகில் படிக்கிறார். பிறகு நான் ஏன் ஓடி ஒழிய வேண்டும் நான் தவறு செய்து ஒளிந்து கொண்டிருக்கிறேன் என்ற பிம்பம் சிலருக்கு தேவைப்பட்டதோ என்னவோ அப்படியே உருவாக்கி விட்டார்கள். எனது காரின் ஓட்டுநர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் தான். காரில் செல்லும் போது கூட பாடகி இசைவாணி பாடிய பாடல் குறித்து தான் பேசிக் கொண்டிருந்தோம். இசைவாணி பாடலை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்றவர்கள் கொச்சைப்படுத்துவது சரி இல்லை. நம்பிக்கை என்பது உண்மையா? பொய்யா? அப்படிங்கறது இரண்டாம் பட்சம். ஆனால் முதலில் அதை மதிக்க வேண்டும்.

யாருடைய தூண்டுதலின் பேரில் இப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை. இசைவாணி மீது ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் காவல்துறை என் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே நான் பேச முடியாது. எனது ஜாமின் மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது, அதுவரை நான் எதுவும் பேச மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.