சென்னை ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி!

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மழைநீர் வெள்ளமாக தேங்கியிருக்கிறது. எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை பாரிஸ் கார்னரில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்ற வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வங்கக்கடலில் புயல் உருவாவது வழக்கமாக மாறியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டும் புயல் உருவாகியுள்ளது. இதற்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புயல் காரணமாக சென்னை முழுவதும் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. வெள்ளம் காரணமாக மக்கள் சிரமத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். மழை வெள்ளம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல மக்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது அவசியமில்லாமல் வெளியில் வரவேண்டாம், மரங்களுக்கு கீழே நிற்க வேண்டாம், மின்கம்பங்களை விட்டு தள்ளி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில்தான் வடமாநில தொழிலாளர் ஒருவர் பாரிஸ் கார்னரில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கிறது. இது இன்று இரவு கரையை கடக்கும் என்று சொல்லப்பட் நிலையில், நாளை காலைதான் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தற்பொது சென்னையில் ஒரு மணி நேரத்தில் 2 செ.மீ அளவுக்கு மழை பெய்து வருகிறது. ஆனால், இனி வரும் அடுத்தடுத்த மணி நேரங்களில் 4-5 செ.மீ வரை மழை பதிவாகும் என்றும், அடுத்த சில மணி நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.