பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் கரையை கடக்கத் துவங்கி, அன்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது. ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்திலே அதிகப்படியாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ அளவில் மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் முழுக்க மயிலம், கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, பெரமண்டூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 49.29 செ.மீ மழை பெய்துள்ளது. தொடர் கனமழை காரணமாக சிங்கனூரில் உள்ள ஏரியின் மதகு உடைந்து மழை நீரானது அந்தப் பகுதியில் உள்ள டிராக்டர் கம்பெனிக்குள் புகுந்தது. இதனால் டிராக்டர், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள்மற்றும் நெல் அறுவடை வாகனங்கள் உட்பட்ட 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீரில் மூழ்கின. நீர், நிறுவனத்துக்குள் புகுந்தால், அங்குள்ள வாகனங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதில் கம்பெனி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கனமழையின் காரணமாக வீடூர் அணை அமைந்திருக்கும் பகுதியில் மட்டும் 24 மணி நேரத்தில் 26 செமீ அளவிற்கு மழை பெய்தது. இந்த மழை காரணமாக வீடூர் அணை தனது முழு கொள்ளளவான 32 அடியில் 30.5 அடிக்கு தண்ணீர் நிரம்பியதால், அனையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது விநாடிக்கு 36 ஆயிரத்து 206 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், சங்கராபரணி ஆற்றின் கரையோரம் உள்ள பொம்பூர், கணபதிப்பட்டு, ரெட்டிக்குப்பம், எடையப்பட்டு, ஆண்டிப்பாளையம் உள்ளிட்ட 18 கிராம மக்களுக்கும், புதுச்சேரி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் உடனே பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மரக்காணத்தில் அரசு பள்ளியில் தங்கியிருந்த நரிக்குறவர்களுக்கு வேட்டி- சேலை மற்றும் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும். வேளாண்மை துறை சார்பில் பயிர்கள் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மழை நின்ற 3 நாட்களுக்குபிறகு இதுகுறித்து துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்தி இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.