மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பதவியேற்பு விழா நாளை மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறுகிறது.
பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று மும்பை விதான் பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கான மத்திய பார்வையாளர்களாக மத்திய நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமனும், குஜராத் முன்னாள் முதல்வரும் பஞ்சாப் மற்றும் சண்டிகர் பாஜக பொறுப்பாளருமான விஜய் ரூபானி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மகாராஷ்டிர மாநில முதல்வராக ஃபட்னாவிஸ் நாளை பதவியேற்கிறார். இதற்கான பதவியேற்பு விழா மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. கடந்த மாதம் நவம்பர் 23-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட போதும் பாஜக கூட்டணியால் உடனடியாக ஆட்சி அமைக்க முடியவில்லை.மகாராஷ்டிரா முதல்வர் பதவியை கேட்டு இடைக்கால முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அடம் பிடித்து வந்தார். இதனை பாஜக நிராகரித் து வந்தது. இதனால் சிவசேனாவுக்கு உள்துறை, துணை முதல்வர் பதவி, சபாநாயகர் பதவியை ஏக்நாத் ஷிண்டே கோரினார். இதனையும் பாஜக ஏற்க மறுத்தது. ஒரு கட்டத்தில் மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டேவை துணை முதல்வராக்க கோரிக்கை வைத்துப் பார்த்தார் ஷிண்டே. இதனையும் பாஜக மேலிடம் ஏற்காததால் ஷிண்டே கடும் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் புதிய அரசு நாளை பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது. மும்பை ஆசாத் மைதானத்தில் இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளன.
இதனிடையே மும்பையில் இன்று மகாராஷ்டிரா பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிரா பாஜக சட்டசபை குழுத் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டமும் மகாயுதி கூட்டணியின் கூட்டமும் நடத்தப்பட்டது. மகாயுதி கூட்டணி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை இன்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ். சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்தார் தேவேந்திர பட்னாவிஸ். மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவியேற்க உள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.