பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்தபோது தனது வளர்ச்சியை விரும்பாத டாக்டர் ராமதாஸ், அவரது மகனின் அரசியல் எதிர்காலத்திற்காக தன்னை கட்சியிலிருந்து நீக்கியதாக ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக செயல்பட்டவர் பண்ருட்டி வேல்முருகன். கடந்த 2001 முதல் 2006 வரையான காலகட்டத்தில் பண்ருட்டி தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2011இல் புதியதாக உருவாக்கப்பட்ட நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி பாமக இணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இவர் 2011 இல் நீக்கப்பட்டார். அதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை இவர் 2012-ல் தொடங்கினார். மீண்டும் 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் பண்ருட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்நிலையில் தனது அரசியல் வாழ்க்கை பற்றியும் பாமகவிலிருந்து தன்னை நீக்கியது பற்றியும் மனம் திறந்து ஒரு பேட்டியை அளித்துள்ளார் வேல்முருகன். அதில், கட்சிக்காக தன் குடும்பத்தையே இழந்து நிற்பதாக உருக்கமாக அவர் பேசி இருக்கிறார். வேல்முருகன் கூறியுள்ளதாவது:-
இன்றைக்கு நான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கிறேன். அதற்கு ஒருவகையில் டாக்டர் ராமதாஸ்தான் காரணம். அரசியல் ரீதியான குடும்ப பின்புலம் எனக்கு இருந்தாலும், எனக்குச் சமூகநீதி அரசியல் பாதையை அறிமுகம் செய்து வைத்தவர் அவர்தான். வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில் அவர் மாலை 6 மணிக்கு ஒரு ஊரில் கொடி ஏற்ற தொடங்கினார் மறுநாள் காலைவரை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். அந்தளவுக்குக் கடுமையான உழைப்பாளி அவர். மிக எளிமையான தலைவராக அவர் இருந்தார். எல்லா ஊர்களுக்கும் பேருந்தில்தான் பயணம் செய்வார். பல கிராமங்களுக்குச் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின்னர் ஒரு அம்பாசிட்டர் கார் வாங்கினார். அந்த காரில்தான் தமிழ்நாடு முழுக்க அரசியல் பயணம் செய்தார். அதிலேயே தூங்குவார். அதிலேயே சாப்பிடுவார். அவரை எந்தவகையில் குறைத்து மதிப்பிட முடியாது.
அவர் முன்வைத்த சமூகநீதி கொள்கையால் ஈர்க்கப்பட்டுதான் அரசியல் பாதைக்கே நான் வந்தேன். இன்றைக்கு ஊடக உலகத்திற்கு நான் தெரிய வந்ததே அவர் கொடுத்த வாய்ப்பினால்தான். கடந்த 2006 முதல் 2011 வரையான காலகட்டத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். பாமக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தது. இலங்கையில் கடுமையான போர் சூழல் நிலவிய காலம். நான் ராமதாசிடம் அமைச்சரவையை விட்டு விலகவேண்டும். 1980களில் நடத்தப்பட்ட சாலை மறியலைப் போல ஈழ விடுதலைக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்த வேண்டும் எனப் புற அழுத்தம் கொடுத்தேன். அவர் அதை ஏற்கவில்லை.
ஈழப் போரில் தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டார். அப்போது நான் ஈழ ஆதரவு போராட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினேன். கட்சிக்கு 10 ஆயிரம் பேரைத் திரட்டி இலங்கைக்குப் போவோம் என்று உணர்ச்சி வேகத்தில் பேசினேன். எனக்கு இலங்கையிலிருந்து சில தகவல்கள் கிடைத்தன. அதையும் ராமதாசிடம் சொன்னேன். எந்தவித ஆதரவும் இல்லை. அன்புமணி அப்போது அமைச்சராக இருந்தார். அதை இழக்க அவர் விரும்பவில்லை. அறிக்கை வெளியிட்டார். போருக்கு எதிராகப் பேசினார். திருமாவளவன் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தைக்கூட அவர்தான் முடித்து வைத்தார். நானும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினேன். கட்சியின் நிலைப்பாட்டை மீறிப் பல கருத்துகளை முன்வைத்தேன். அதை ராமதாசினால் ஜீரணிக்க முடியவில்லை.
கடலூரில் நான் நடத்திய பிரம்மாண்டமான மாநாடு என் செல்வாக்கைக் கட்சிக்குள் உயர்த்தியது. தனித்து நான் அடையாளம் காணப்பட்டேன். ராமதாசின் மகன் இருக்கும்போது வெளிச்சம் என் மீது விழுவதை ராமதாஸ் விரும்பவில்லை. இன்னும் சொல்லப் போனால் கட்சிக்குள் அன்புமணியை நான் தான் கொண்டு வந்தேன். அவரது முதல் அரசியல் நிகழ்ச்சி நான் நடத்தியது. என் தம்பியின் திருமணம்தான் அவர் கலந்து கொண்டு முதல் திருமண நிகழ்ச்சி. அவரை முதன் முதலாக டிவி நிகழ்ச்சியில் பேச வைத்ததும் நான் தான். அதற்கு ஏற்பாடும் செய்தேன். பென்னாகரம் இடைத்தேர்தல் குழு என் தலைமையில் அமைக்கப்பட்டது. குரு முடியாது என ஒதுங்கிக் கொண்டார். ஜிகே மணி பின்வாங்கிவிட்டார். நான் சில கோடிகளைக் கடன் வாங்கி தேர்தலைச் சந்தித்தேன். ஒருவருக்கு கூட பணம் கொடுக்காமல் ஆளும் கட்சியை 2வது இடத்திற்கு தள்ளினேன். எனது வளர்ச்சி பற்றி தவறான ஒரு எண்ணத்தை ராமதாஸ் மனதில் உருவாக்கினார்கள். ஆகவே, அவர் என்னை வளரவிடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தார்.
2011இல் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டைக் கட்சிக்குச் சொன்னேன். சசிகலா கூட என்ன போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்து அதிமுக கூட்டணி பற்றிப் பேசினார். அதைக் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் போட்டு உடைத்தேன். தேர்தல் கூட்டணியில் ஈடுபாடு காட்டாமல் வேலை செய்தேன். தேர்தல் முடிந்ததும் என்னை ராமதாஸ் கட்சியிலிருந்து எந்தவித விளக்கமும் சொல்லாமல் நீக்கிவிட்டார். கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நான். என்னைப் பொதுக்குழு கூட்டாமல் எப்படி நீக்க முடியும் என்று ஊடகங்கள் மூலம் கேள்வி எழுப்பினேன். அந்த நேரத்தில் அன்புமணி எனக்கு ஆறுதலாக இருந்தார். பொறுமையாக இருக்கச் சொன்னார். மீண்டும் என்னை இணைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
வன்னியர் சங்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து 25 வருடம் ராமதாஸ் குடும்பத்திற்காகவே உழைத்திருக்கிறேன். என்னையே போகிற போக்கில் வெளியேற்றினார்கள். மனரீதியாகப் பாதிக்கப்பட்டேன். உடல்நிலை பாதிக்கப்பட்டேன். என் துணைவியை இழந்தேன். அவர் கட்சிக்காகவே வாழ்கிறேன். பணம் சம்பாதிக்கத் தெரியவில்லை. எனக்குச் சம்பாதிக்கத் தெரியவில்லை. சொந்த வீடு, கார் எதுவும் இல்லை என்று என்னைவிட்டுப் பிரிந்து போனார். அந்தளவுக்கு என் பொது வாழ்க்கைக்காக என் சொந்த குடும்பத்தை இழந்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.