“எனக்கு எதிராக கறை படிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்” என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை டெல்லி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். பின்னர் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், ஜாபர் சாதிக்கை திமுகவுடன் தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகக் கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கோரி பழனிசாமிக்கு எதிராக திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுத்தளத்தில் இருந்த தகவல்களின் அடிப்படையில் அந்த தகவலை பதிவிட்டு இருந்தேன். எனக்கு எதிராக கறை படிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே திமுகவில் அங்கம் வகித்த ஜாபர் சாதிக்கை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாகக்கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது.
உண்மையை மறைக்க முடியாது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க உயர் நீதிமன்றமே குழுவை அமைத்துள்ள நிலையில், அரசின் செயல்படாத தன்மையை சுட்டிக்காட்டுவது அவதூறு ஆகாது. திமுக நிர்வாகிகள் சிலர் தொடர்ச்சியாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானதில், அவ்வாறு நான் கூறியதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தனிமனித பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை அதிகபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கோரப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், இந்த வழக்கு விசாரணையை வரும் டிச.17-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.