வங்கதேசத்தை கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: எச்.ராஜா உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது!

வங்கதேசத்தை கண்டித்து கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை சிவானந்தா காலனியில் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் இந்துத்துவ அமைப்புகள், மடாதிபதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேட்டியளித்த எச்.ராஜா கூறியதாவது:-

வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாதத்தில் உள்நாட்டு குழப்பம் வந்தபோது ஷேக் ஹசீனா தலைமைலான ஜனநாயக அரசு அகற்றப்பட்டு யூனூஸ் தலைமையிலான தற்காலிக அரசு அமைக்கப்பட்டது. ஷேக் ஹசீனா இப்போது இந்திய நாட்டுக்குள் அடைக்கலம் புகுந்துள்ளார். யூனூஸ் தலைமையில் ஆட்சி அமைந்தது முதலே அங்கு ஹிந்துக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹிந்து பெண்களை மானபங்கப்படுத்துதல், காளி கோயில், இஸ்கான் கோயில் உள்ளிட்டஹிந்து வழிபாட்டு தலங்களை இடித்தல், கோயில்களில் வளர்க்கப்படும் பசுக்களை கொடூரமாக அடித்து கொல்லுதல், ஹிந்துக்களை அரசு பணியில் இருந்து மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தல் போன்ற மனித தன்மையற்ற நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. மொத்தம் 49 மாவட்டங்களில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் ஆயிரத்து 500 ஹிந்து ஆசிரியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இதை யூனூஸ் தலைமையிலான தற்காலிக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மட்டுமல்லாமல், மறைமுக ஆதரவும் அளித்து வருகிறது. பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் இந்திய நாட்டின் எல்லையை நோக்கி அடைக்கலமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் அங்கே ஹிந்துக்களின் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை வழி நடத்திய இஸ்கான் அமைப்பின் துறவி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு வங்கதேச அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வெளியில் எடுப்பதற்காக பெயில் பெட்டிஷன் அளித்த வழக்கறிஞரை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கொளுத்தி கொன்றுள்ளனர். இதே சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு வங்கதேசத்தில் பல சேவைப்பணிகளை முன்னின்று நடத்தியவர். சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தில் புயல் வெள்ளம் வந்த போது மத வித்தியாசமின்றி எல்லோரையும் காத்தவர். ஆனால் இப்போது வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்ததால் அவரை கைது செய்தது மட்டுமல்லாமல், இஸ்கான் அமைப்பை மிரட்டி அவரை வெளியேற்றியுள்ளனர். அது முதல் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் வங்கதேசத்தில் தீவிரமடைந்துள்ளது.

எங்கோ இருக்கும் பாலஸ்தீனத்துக்கும் சிரியாவுக்கும் குரல் கொடுக்கும் கம்யூனிஸ்டுகள், போலி மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் வங்கதேச ஹிந்துக்கள் பிரச்சனையில் மௌனமாக இருப்பதற்கு காரணம் என்ன? அங்கு நடக்கும் உண்மைகளை இங்கே வெளிவரவிடாமல் தடுக்கும் நோக்கம் என்ன? நம்முடைய அண்டை நாட்டு பிரச்சனை பற்றி எப்போது பேசப் போகிறார்கள்? வங்கதேசம் என்ற நாடு பிறந்ததற்கு இந்திய அரசு மட்டுமே காரணம். அப்படிப்பட்ட நாட்டில் தொப்புள்கொடி ஹிந்துக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது.

இந்த மனிதநேயமற்ற வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும், இந்த விஷயத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு உலக அரங்கில் வங்கதேசத்தை தனிமைப்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும், வங்கதேசத்துக்கு ஐநா படையை அனுப்ப வேண்டும் போன்ற விஷயங்களை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று அனைத்து ஹிந்து இயக்கங்களும் கூட்டாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். ஜனநாயக வழியில் அமைதியான முறையில் நடத்தப்படும் இந்த ஆர்பாட்டத்திற்கு, ஹிந்து விரோத ஸ்டாலின் அரசு, தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஹிந்துக்கள் பாதிக்கப்படும் போது அதை எதிர்த்து ஜனநாயக முறையில் போராடக்கூட தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு உரிமையில்லை என்பது மிகவும் கவலைக்குரியது கண்டனத்திற்கு உரியது. இது எந்த அளவுக்கு அவமானது, இந்து விரோதமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஸ்டாலின் அரசாங்கத்தால் உரிமமையற்றவர்களாகவும், இரண்டாம் தர குடிமக்களாகவும் இந்துக்கள் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டுமானால், 2026 இல் திமுக கூட்டணி வேரோடு அழிக்க வேண்டும்.

தூத்துக்குடியிஸ் சங்கர ராமேஸ்வரர் கோயில் நிலத்தில் சொற்ப வாடகைக்கு திமுகவினருக்கு கோவில் இடத்தை குத்தகைக்கு கொடுத்துள்ளனர். அமைச்சர் கீதா ஜீவனுடம், கனிமொழி அங்குள்ள வணிக வளாகத்தை திறந்துவைத்துள்ளார். இந்து கோயிலின் சொத்துகளை கொள்ளையடிக்கும் அமைப்பு திமுக. இந்துக்களுக்கு விரோதமான ஸ்டாலின் அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கிறோம், 1971 இல் இந்துக்கள் அகதிகளாக வந்ததால் தான் பாகிஸ்தானுடன் யுத்தம் செய்ய வேண்டி நிலை வந்தது. எனவே, நேச நாடுகளோடு பேசி இதற்கு மத்திய அரசு உரிய தீர்வு காணும். ஏற்கனவே டிரம்ப் நான் இருந்திருந்தால் வங்கதேசத்தினருக்கு இந்த நிலை வந்திருக்குமா என்று கேட்டுள்ளார். எனவே, சர்வதேச குரல் இந்துக்களுக்கு ஆதரவாக ஒலிக்கும் என்பது இதன் மூலம் தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதனையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச்.ராஜா உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.