கட்சி தாவுவதாகச் சொல்வதில் அவதூறு ஒன்றும் இல்லை: அப்பாவுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு!

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. கட்சி தாவுவதாகச் சொல்வதில் அவதூறு ஒன்றும் இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்று பேசியிருந்த, தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா இறந்த நேரத்தில் திமுகவுக்கு வர 40 எம்எல்ஏக்கள் தயாராக இருந்ததாகவும், ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் அதனை ஏற்க மறுத்துவிட்டார் என்றும் கூறினார். இவரது பேச்சுக்கு அதிமுகவினர் மத்தியில் கண்டனங்கள் எழுந்தன. அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பாபு முருகவேல், அப்பாவுக்கு எதிராக எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் அப்பாவு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது அப்பாவு சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் வில்சன், “ஒரு கட்சியின் மீது அவதூறு பரப்பப்படுவதாக அக்கட்சி நினைத்ததால், கட்சியின் தலைவர் அல்லது பொதுச்செயலாளர்தான் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய முடியும். ஆனால் வழக்கில் சம்பந்தமே இல்லாமல் பாபு முருகவேல் இங்கு வழக்கு தொடுத்திருக்கிறார்” என்று வாதாடினார். இதனையடுத்து பாபு முருகவேலிடம் நீதிபதி, அவதூறு வழக்கை தாக்கல் செய்ய என்ன அடிப்படை உள்ளது. 40 எம்.எல்.ஏ.க்களில் எவரும் வழக்கு தாக்கல் செய்யவில்லை. சபாநாயகர் அப்பாவு தனது பேச்சில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. உங்கள் கட்சிக்கு அவர் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

அதற்கு பாபு முருகவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அதிமுகவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியிருந்ததால், கட்சி சார்பில் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்துள்ளோம். அதற்குக் கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது” எனத் தெரிவித்தார். இதையடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கற்பனையாக கூறக்கூடாது என பாபுமுருகவேல் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதி, அதிமுக ஆட்சி ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை பூர்த்தி செய்தது. எவரும் கட்சி தாவவில்லை. சபாநாயகர் பேச்சால் எப்படி அதிமுக-வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது? எப்படி அவதூறாகும் எனக் கேள்வி எழுப்பினார். அதைத்தொடர்ந்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பாபு முருகவேல். சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை, அதிமுக எம்எல்ஏக்கள் கட்சித் தாவ தயாராக இருந்தார்கள் என்ற தவறான தகவலை சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிமுகவுக்கு களங்கம் ஏற்பட்டது உண்மை. எனவே சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், அந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என பாபு முருகவேல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. “ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு உறுப்பினர்கள் தாவுவது என்பது இயல்பு. அப்படி இருக்கையில் இதில் என்ன அவதூறு உள்ளது? நமது ஜனநாயகம், சட்டம் ஒரு கட்சியின் உறுப்பினர் மற்றொரு கட்சிக்கு செல்வதை அனுமதிக்கிறது. இதில் அவதூறு ஒன்றும் இல்லை” எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தது அதிமுக தரப்பு. மனுதாரர் கோரிக்கையை ஏற்று மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து அப்பாவுவிற்கு எதிரான அவதூறு மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.