உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் விஷ்வ ஹிந்து பரிஷத்(விஹெச்பி) சட்டப்பிரிவு மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பங்கேற்றுள்ளார். இந்த விவகாரம் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சி (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
விஹெச்பி ஒரு வலதுசாரி அமைப்பு, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கருத்தியல் வழிகாட்டியான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) இணைந்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் விஹெச்பி தடை செய்யப்பட்டுள்ளது. ‘வெறுப்பு மற்றும் வன்முறை சக்தி’ என்று வல்லபாய் படேல் தடை செய்த ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையது.
இதுபோன்ற அமைப்பின் மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி கலந்து கொண்டது துரதிர்ஷ்டவசமானது. இந்த ‘பேச்சு’ எளிதில் மறுக்கப்படலாம், ஆனால் இந்திய அரசியலமைப்பு, நீதித்துறை சுதந்திரத்தையும் பாரபட்சமற்ற தன்மையையும் எதிர்பார்க்கிறது என்பதை உங்களுக்கு நினைவூட்டுவது மிகவும் முக்கியமானது. இந்திய அரசியலமைப்பு பெரும்பான்மையானது அல்ல, ஜனநாயகமானது. ஜனநாயக நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
விஹெச்பியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நீதிபதியின் முன் சிறுபான்மை கட்சி எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்? நீதித்துறையின் பாரபட்ச ன்மையை இது கேள்வி எழுப்புகிறது என்று கடுமையாக சாடியுள்ளார்.
முன்னதாக இதுகுறித்து நீதிபதி யாதவ் கூறுகையில், ‘இது இந்துஸ்தான் (இந்தியா) என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை, பெரும்பான்மையினரின் (இந்துக்களின்) விருப்பப்படி இந்த நாடு செயல்படும். இதுதான் சட்டம். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தும் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கூற முடியாது. பெரும்பான்மைக்கு ஏற்ப சட்டம் செயல்படுகிறது’ என்று கூறியுள்ளார். நீதிபதியின் இந்த பேச்சுக்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.