மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியது. நாட்டில் பதற்றம் அதிகரித்ததால், அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 1971-ல் ராணுவ மூத்த தளபதியாக இருந்த ஹபீஸ் அல் ஆசாத் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். 29 ஆண்டுகள் சிரியா அதிபராக இருந்த அவர் 2000-ம் ஆண்டில் காலமானார். அவரது மகன் பஷார் அல் ஆசாத் கடந்த 2000 ஜூலை 17-ம் தேதி அதிபரானார். அவர் ஷியா பிரிவை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
அதிபர் ஆசாத்துக்கு ஈரான், ரஷ்யா ஆதரவு அளித்தன. கிளர்ச்சி படைகளுக்கு துருக்கி, அமெரிக்கா ஆதரவு அளித்தன. கடந்த 2014-ல் சன்னி பிரிவை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழு சிரியாவின் பெரும் பகுதியை கைப்பற்றியது. அதிபர் ஆசாத் படைகள் கிளர்ச்சி படைகள் இடையிலான போர் பல ஆண்டுகள் நீடித்தது. இதில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர். பின்னர், ரஷ்யா, ஈரானின் ஆதரவால் அதிபர் ஆசாத்தின் கை ஓங்கி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டன. இந்த சூழலில் ரஷ்யா – உக்ரைன் போரை தொடர்ந்து, சிரியா அதிபர் ஆசாத்தின் ராணுவத்துக்கு ரஷ்யா, ஈரானின் ஆதரவு படிப்படியாக குறைந்தது.
இதற்கிடையே, சன்னி பிரிவை சேர்ந்த ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் (எச்டிஎஸ்) என்ற கிளர்ச்சி குழு வளர்ச்சி அடைந்தது. அல்-காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இந்த கிளர்ச்சி குழுவுக்கு துருக்கி ஆதரவு அளித்தது. கடந்த நவம்பர் 27-ம் தேதி சிரியா ராணுவத்துக்கு எதிராக மிகப் பெரிய போரை எச்டிஎஸ் கிளர்ச்சி படை தொடங்கியது.
கடந்த 1-ம் தேதி சிரியாவின் அலெப்போ நகரை கைப்பற்றியது. அடுத்தடுத்து பல்வேறு நகரங்களை கைப்பற்றிய எச்டிஎஸ் படை வீரர்கள், நேற்று சிரியா தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றினர். மத்திய வங்கி, அதிபர் மாளிகை, அரசு அலுவலகங்களில் பணம், பொருட்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. பதற்றம் அதிகமான நிலையில், அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்.
எச்டிஎஸ் கிளர்ச்சி குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஆசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்த கிளர்ச்சி படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறும்போது. “இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்படுகிறது. சிரியாவில் உள்ள இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளோம். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை தூதரகம் வழங்கும்” என்றனர்.
சிரியாவில் இருந்து தப்பிய அதிபர் ஆசாத்துக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஆசாத்தின் மனைவி அஸ்மா, பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்தவர். சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்த போது, மனைவி, பிள்ளைகள் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், ஆசாத் மட்டும் தலைநகர் டமாஸ்கஸில் இருந்தார். கடந்த 7-ம் தேதி வரை அவர் அங்கு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. சிறப்பு விமானத்தில் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
சிரியாவை கைப்பற்றியுள்ள ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்) கிளர்ச்சி படையின் தலைவராக இருப்பவர் அபு முகமது அல் ஜுலானி (42). சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் பிறந்தவர். இவரது குடும்பத்தினர் சிரியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் வாழ்ந்த பகுதியை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்ததால், சவுதி அரேபியாவுக்கு இடம்பெயர்ந்தனர்.
கடந்த 2003-ல் ஜூலானி மருத்துவக் கல்வி பயின்று வந்தார். அப்போது இராக்கை, அமெரிக்க ராணுவம் ஆக்கிரமித்ததால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அல்-காய்தா தீவிரவாத அமைப்பில் இணைந்தார். இராக்கில் அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக போரிட்டார். கடந்த 2006-ல் அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 5 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு 2011-ல் விடுதலை ஆனதும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து, சிரியா அதிபர் ஆசாத்துக்கு எதிராக போரிட்டார்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வீழ்ச்சிக்கு பிறகு, ஜபாத் அல் நஸ்ரா என்ற அமைப்பை தொடங்கினார். கடந்த 2017-ல் எச்டிஎஸ் கிளர்ச்சி படையுடன் ஜபாத் அல் நஸ்ரா இணைந்தது. இதன்பிறகு எச்டிஎஸ் தலைவரானார். இந்த அமைப்பில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சிரியாவின் புதிய அதிபராக அல் ஜுலானி பதவியேற்கக்கூடும் என்று தெரிகிறது.
இந்நிலையில் சிரியாவில் ஏற்பட்டுள்ள ஆசாத் ஆட்சியின் சரிவை அமெரிக்க ஜனாதிபதி பைடன் புகழ்ந்துள்ளார். இதனை நீதிக்கான வரலாற்று செயல் என கூறியுள்ள பைடன், அந்நாட்டு மக்கள் சிரியாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு கிடைத்த வரலாற்று சந்தர்ப்பத்திற்கான தருணம் ஆகும் என்றார்.
தொடர்ந்து பைடன் கூறும்போது, 13 ஆண்டு கால உள்நாட்டு போருக்கு பின்னர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசாத், அவருக்கு முன்னர் அவருடைய தந்தை ஆகியோரின் கொடூர ஆட்சி முறை சூழலில், கிளர்ச்சி படையினர் வலுகட்டாயப்படுத்தி, பதவியில் இருந்து ஆசாத் வெளியேறும்படி செய்ததுடன் அவரை நாட்டில் இருந்தே தப்பியோடும்படி செய்து விட்டனர் என கூறியுள்ளார்.
நீண்ட காலத்திற்கு பின்னர், ஆசாத் ஆட்சி வீழ்ச்சி கண்டுள்ளது. லட்சக்கணக்கான அப்பாவி சிரிய மக்களை சித்ரவதை செய்து, கொடூர வகையில் கொலை செய்தது இந்த ஆட்சி என்றும் கூறியுள்ளார். எனினும், இதனால் நிச்சயமற்ற தன்மை மற்றும் ஆபத்து ஆகியவையும் ஏற்பட்டு உள்ளது என பைடன் ஒப்பு கொண்டிருக்கிறார். சிரியாவில் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கு அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் மற்றும் சிரியாவின் நலம்விரும்பிகளுடன் இணைந்து செயல்படும் என்றும் பைடன் கூறியுள்ளார்.