ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை குறித்து திருமாவளவன் விளக்கம்!

“திமுக தரப்பில் இருந்து எந்தவித அழுத்தமும், நெருக்கடியும் எமக்கு இல்லை. ஆதவ் அர்ஜுனா பேச்சு பற்றி திமுகவினர் யாரும் பேசவும் இல்லை” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் இன்று (டிச.9) சந்தித்தார். பெஞ்சல் புயல் நிவாரணமாக விசிக சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

பெஞ்சல் புயல் நிவாரணம் வழங்குவதில், வழக்கம்போல மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துள்ளது. 944.80 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு விசிக சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினோம்.

விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அண்மைக் காலமாக பல்வேறு நிகழ்வுகளில் அல்லது சமூக ஊடகங்களில் தன்னுடைய கருத்துகளைப் பதிவிட்டதன் மூலம், கட்சியின் நன்மதிப்புக்கும், நம்பகத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சூழல் உருவானது. அதுகுறித்து தொடர்ச்சியாக அவரிடத்தில் அறிவுறுத்தல் செய்தோம். ஆனாலும் கூட, அண்மையில் நடந்த நிகழ்வில் அவருடைய பேச்சு கட்சியின் நன்மதிப்புக்கும், தலைமையின் நம்பகத்தன்மைக்கும் எதிராக அமைந்திருந்த சூழலில்தான், கட்சியின் முன்னணி தலைவர்கள் தலைமை நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் உடன் கலந்தாய்வு செய்து 6 மாத காலத்துக்கு அவரை இடைநீக்கம் செய்திருக்கிறோம்.

திமுக தரப்பில் இருந்து எந்தவித அழுத்தமும், நெருக்கடியும் எமக்கு இல்லை. ஆதவ் அர்ஜுனா பேச்சு பற்றி திமுகவினர் யாரும் பேசவும் இல்லை. விஜய் பங்கேற்ற நிகழ்வில் நான் பங்கேற்க இயலாது என்று எடுத்த முடிவு சுதந்திரமான முடிவு. விசிக-வுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த மோதலும் இல்லை. விஜய்யுடன் எங்களுக்கு எந்த சர்ச்சையோ, சிக்கலும் ஏற்பட்டதில்லை. ஆனால் அவரோடு நாங்கள் ஒரே மேடையில் ஒரு நிகழ்விலே பங்கேற்கிற போது, எங்களுடைய கொள்கைப் பகைவர்கள், எமது வளர்ச்சியை விரும்பாதவர்கள், எங்களை வீழ்த்த வேண்டும் என்று கருதுபவர்கள், அதையொரு வாய்ப்பாக பயன்படுத்தி எங்களுக்கு எதிராக கதைக்கட்டுவதற்கு, திரிபுவாதம் செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை நாங்கள் உணர்ந்து, எங்களது நலனைக் கருத்தில்கொண்டு நாங்கள் எடுத்த முடிவு.

அதை தனியார் பதிப்பகத்தாருக்கு தொடக்க நிலையிலேயே சுட்டிக்காட்டி விட்டோம். ஆனால், அதைத்தொடர்ந்து சர்ச்சையாக சிலர் அதை திட்டமிட்டு பேசுபொருளாக மாற்றினார்கள். அந்த நிகழ்வில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனாவிடம், அரசியல் எதுவும் பேச வேண்டாம். அம்பேத்கர் குறித்தும், நூல் உருவாக்கத்தில் அவருடைய பங்கு குறித்தும் பேசுமாறு, சில வழிகாட்டுதல்களைத் தெரிவித்தேன். அதைமீறி, அவரது பேச்சு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. விசிக-வின் மீதான நம்பகத்தன்மையை நொறுக்கும் அளவுக்கு அது அமைந்துவிட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதான் தேவை அமைந்ததன் அடிப்படையில் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆதவ் அர்ஜுனா மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாற்று சிந்தனை கொண்ட வெவ்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் ஒரு நிகழ்வில் பங்கேற்பதில் தவறில்லை. ஆனால், அதுபோன்ற ஆரோக்யமான அரசியல் சூழல் தமிழகத்தில் இல்லை. எல்லாவற்றையும் சிண்டு முடிவது, திசைத்திருப்புவது, மடைமாற்றுவது என ஒரு தமிழ் நாளேடு ஏதோ நடக்கக்கூடாது ஒன்று நடக்கப்போவதைப் போல, தலைப்புச் செய்தியிட்டு, ‘டிச.6 தமிழக அரசியலில் திருப்பம், விஜய் திருமா ஒரே மேடையில்’ என்று அதை பூதாகரப்படுத்தினார்கள். அவர்கள்தான் இந்த சர்ச்சைக்கு தொடக்கப்புள்ளியே வைத்தார்கள். அப்படியானவர்கள் இருக்கிற சூழலில் நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, பாஜக தலைவர் அண்ணாமலை விசிக திருமாவளவன் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது ஆதவ் அர்ஜுனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று பேசியிருப்பது தொடர்பான கேள்விக்கு, “பாஜக அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? மோடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்பதை அவர் முதலில் கூறட்டும், அதன்பிறகு நான் இதற்கு பதில் கூறுகிறேன்” என்றார்.