வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேறாமல் போனது யார் தவறு?: மு.க. ஸ்டாலின்!

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்படாமல் போனது குறித்து சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கையில், அந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் போனதற்கு யார் மீது தவறு என்பதை விளக்கிக் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது ஜி.கே.மணி (பாமக) பேசும்போது, “தமிழகத்தில் முஸ்லிம்களுக்கும், அருந்ததியருக்கும் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இப்போது வன்னியர்களுக்கு 10.5 உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்ல” என்றார்.

அதையடுத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது:-

மிகவும் பிற்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை கருணாநிதி வழங்கினார். அதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு போய் வெல்ல முடியவில்லை. அதுபோல அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீட்டையும் கருணாநிதி வழங்கினார். அதையும் எதிர்த்து நீதிமன்றம் சென்று வெல்ல முடியவில்லை. ஆனால், நீங்கள் தேர்தல் கூட்டணி வைத்தீர்கள். அந்த நேரத்தில் அவசரகதியில் கொண்டு வரப்பட்டதால் உள்ஒதுக்கீட்டுக்கான சட்டம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. எனவே, தகுந்த புள்ளிவிவரத்தோடு இந்த சட்டத்தை அறிவித்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியுள்ளது. அந்த புள்ளிவிவரம் பெறுவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதைச் செய்ய வேண்டியது உங்களது கூட்டணியில் உள்ள மத்திய அரசுதான். அங்கே பேசுவதை விட்டுவிட்டு இங்கே பேச வேண்டியதை வீதியில் பேசி நாட்டு மக்களை ஏமாற்றக் கூடாது. இவ்வாறு கூறினார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டுப் பேசும்போது, “நீங்கள் இந்த சட்டத்தை முறையாகக் கொண்டு வரவில்லை. இருந்தாலும் தேர்தல் வந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது, அந்த சட்டத்தை முறையாக நிறைவேற்ற தயாராக இருந்தோம். அந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றத்துக்கு சென்று தடை ஆணை வாங்கப்பட்டுவிட்டது. இதில் யார் மீது தவறு” என்று கேள்வி எழுப்பினார்.