இஸ்லாமிய மக்களுக்கு மீண்டும் துரோகத்தை செய்துள்ளது அதிமுக என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சா.மு.நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மக்களை அவதூறு செய்து பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியை பணிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் தீர்மானம் கொண்டுவந்தனர். இந்த தீர்மானத்துக்கு அதிமுக எம்.பிக்கள் கையெழுத்திட மறுத்துள்ளனர். இதனை குறிப்பிட்டு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என கூறி மக்களை ஏமாற்றி அதிமுக கள்ள உறவை தொடர்கிறது. இரட்டை வேடம் போட்டு இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறது. இஸ்லாமியரை அவதூறாக பேசிய அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியை பணிநீக்க கோரும் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கவில்லை. கையெழுத்திட மறுத்து இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக மீண்டும் துரோகத்தை செய்துள்ளது. கையெழுத்திட மறுத்ததன் மூலம் பாஜகவுடன் கள்ளக் கூட்டணியை எடப்பாடி தொடர்வது அம்பலமாகி உள்ளது.
அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கக் கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொண்டுவந்தனர். 3 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய தீர்மானத்துக்கு முதல்வர் உத்தரவின் பேரில் திமுக எம்.பி.க்கள் ஆதரவாக கையெழுத்திட்டனர். அதிமுகவை சேர்ந்த 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்தும் ஒருவர்கூட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு தோளோடு தோள் நிற்பது திமுகதான். மதப்பிரிவினைவாதிகளுடன் என்றும் கைகோர்க்க மாட்டோம் என நெஞ்சுரத்தோடு களமாடி வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏற்கெனவே சிஏஏவுக்கு ஆதரவாக வாக்களித்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருந்த அதிமுக, தற்போதும் எதிராகவே உள்ளது. இஸ்லாமியருக்கு பாதுகாவலாக இருப்பது அதிமுக மட்டுமே என பேசும் பழனிசாமியின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது. இஸ்லாமிய மக்கள் முதுகில் குத்துவதையே அதிமுக வாடிக்கையாக கொண்டது. அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தையும் இஸ்லாமிய மக்கள் என்றுமே மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.