6 மாத சிறைத் தண்டனை தீர்ப்பை எதிர்த்து எச்.ராஜா மேல்முறையீடு!

பெரியார் சிலையை உடைப்பு குறித்தும் திமுகவின் கனிமொழி தொடர்பாகவும் அவதூறாகப் பேசிய வழக்கில் எச்.ராஜாவை சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. இந்த இரு வழக்குகளிலும் தலா 6 மாதம் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்திருந்தது. இதற்கிடையே இந்த தண்டனையை எதிர்த்து ஹெச் ராஜா இப்போது மேல்முறையீடு செய்துள்ளார்.

இப்போது பாஜக தமிழக ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருப்பவர் எச். ராஜா. கடந்த காலங்களில் இவரது பேச்சுக்கள் பல முறை சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. அப்படி தான் கடந்த 2018ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அது அப்போது தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல திமுக எம்பி கனிமொழி தொடர்பாகவும் சில அவதூறு கருத்துகளைத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக, காங்கிரஸ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், அதை ரத்து செய்யக் கோரி எச். ராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும், அந்த மனுவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், மூன்று மாதங்களில் இரண்டு வழக்குகளின் விசாரணையை முடிக்கச் சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பு நடந்தது. அப்போது எச். ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் இல்லை.. திமுக எம்பி கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து.. கனிமொழி நேரடியாகப் புகார் அளிக்காத நிலையில், யாரோ தந்த புகார் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் எச். ராஜாவை விடுவிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இருப்பினும், இந்த வாதத்தை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, எச்.ராஜா மீதான குற்றச்சாட்டை போலீசார் நிரூபித்து இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், சமூக வலைத்தளங்களில் எச்.ராஜாவின் பக்கத்திலேயே சர்ச்சை கருத்து வெளியிடப்பட்டது என்றும் குறிப்பிட்டார். எனவே எச்.ராஜாவை குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு இரு வழக்குகளிலும் தலா 6 மாதம் சிறைத் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இரு வழக்குகளிலும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர் மேல் முறையீடு செய்துள்ளார். நேரடி சாட்சியங்களும் ஆதாரங்களும் இல்லாத நிலையில், விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது சட்ட விரோதமானது என்று கூறி மேல்முறையீடு செய்துள்ளார்.