கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த விஷசாராய சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடா்பான வழக்கை மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைத் தொடர தடையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச் சாராயம் குடித்து 67 போ் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. இது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அதிமுக, தேமுதிக, பாஜக தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமாா், பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வு, கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடா்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நவ.20-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிா்த்தும், உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்குரைஞா் டி.குமணன் மூலம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ‘சிபிஐ வசம் வழக்கை ஒப்படைத்தால் புலன் விசாரணை முடிய காலதாமதமாகும். தமிழ்நாடு காவல் துறையே விசாரணையைத் தொடா்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று கூறி, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.