மும்பை கடலில் படகுகள் மோதிய விபத்தில் 13 பேர் பலி!

மும்பை கடலில் கடற்படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் பயணிகள் கப்பல் மோதிக்கொண்டன. இதில் கடலில் கவிழ்ந்த கப்பலில் பயணித்தவர்களில் 13 பேர் இறந்துள்ளனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மும்பை கடலில் இன்று 2 கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்தனர். இதையடுத்து உடனடியாக மீட்பு பணி தொடங்கியது. இதுதொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

மும்பையின் அருகே புட்சர் தீவுப்பகுதியில் கடற்படைக்கு சொந்தமான கப்பல், நீலக்கமல் என பெயர் கொண்ட பயணிகள் கப்பல் மீது மோதியது. இந்த சம்பவம் மாலை 3.55 மணிக்கு நடந்தது. உடனடியாக மீட்பு பணி தொடங்கியது. இரவு 7.30 மணி நிலவரப்படி 101 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக 13 பேர் பலியாகி உள்ளனர். பலியான 13 பேரில் 10 பேர் பொதுமக்கள். 3 பேர் கடற்படையை சேர்ந்தவர். இன்னும் 2 பேர் ஆபத்தான நிலையில் கடற்படைக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

11 கிராப்ட் மற்றும் 4 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கடற்படை, கடலோர காவல்படையினர், போலீசாரும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் வேறு யாராவது மிஸ் ஆகி உள்ளனரா? என்பது பற்றிய விபரம் நாளை காலையில் தான் தெரியவரும். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் கடற்படை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.