சவுக்கு சங்கரை 2 நாள் நீதிமன்ற காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கரை 2 நாள் நீதிமன்ற காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சவுக்கு சங்கர் வரும் 20ம் தேதி சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக கடந்த மே 4-ம் தேதியன்று தேனியில் தங்கியிருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோயமுத்தூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.‌ அப்போது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் சுமார் 2.5 கிலோ கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர், கார் டிரைவர் என 3 பேர் மீது பழனி செட்டி பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கிலும் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் பின்னர் நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்த சவுக்கு சங்கருக்கு நேற்று மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச் செல்வன் பிடிவாரண்ட் பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து சென்னைக்கு விரைந்த தேனி போலீஸார், சவுக்கு சங்கரை கைது செய்து இன்று(புதன்கிழமை) காலை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.‌ பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் மீண்டும் பழனி செட்டி பட்டி காவல் நிலையத்துக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். பின்னர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இன்று சவுக்கு சங்கரை போலீசார் மதுரை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது சவுக்கு சங்கரை 2 நாள் நீதிமன்ற காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சவுக்கு சங்கர் வரும் 20ம் தேதி சிறையில் அடைக்கப்பட உள்ளார்.