நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசன விவாதத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்து பேசினார்.
மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து மத்திய மந்திரி அமித்ஷா பேசினார். அதில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பேசிய அமித் ஷா, நேரு மற்றும் இந்திரா காந்தியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதன்படி காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “நமது நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெறாது என்று ஆரம்பத்தில் சிலர் சொன்னார்கள்.. ஆனால், அப்படிச் சொன்னவர்கள்தான் காணாமல் போனார்கள். பல சர்வாதிகாரிகளின் ஆணவத்தை இந்த அரசியல் சாசனம் நசுக்கி உள்ளது. அரசியல் சாசன சட்டத்தை மாற்ற பா.ஜ.க .முயல்வதாக எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள். ஆனால், இது சட்டவிரோதமானது இல்லை.. உண்மையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கான ஆப்ஷன் அரசியலமைப்பிலேயே இருக்கிறது.
சர்வாதிகாரத்தின் பெருமையை மக்கள் உடைத்துவிட்டனர். சிலருக்கு இந்தியத்தன்மை ஒருபோதும் புலப்படாது. நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் அப்போது இந்தியாவில் நிச்சயம் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடைய முடியாது என்று சிலர் கூறினர். அவர்களுக்கும் அரசியலமைப்பு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இன்று நாம் உலகின் 5வது மிகப் பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம். பிரிட்டனை விடப் பொருளாதார ரீதியில் முன்னேறி இருக்கிறோம். கடந்த 55 ஆண்டுகளில் காங்கிரஸ் சுமார் 77 முறை அரசியல் சாசனத்தைத் திருத்தி உள்ளது.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இருந்த போது, பேச்சு சுதந்திரத்தை குறைக்க அப்போதைய காங்கிரஸ் கட்சி தான் அரசியல் சாசன சட்டத்தைத் திருத்தியது என்பதை நினைவு கூர விரும்புகிறேன். அதன் பிறகு பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது தேர்தல் செல்லாது என்று அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டதால், நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார்.
அந்த காலக்கட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், ஊடகங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இஸ்லாமியர்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது. பா.ஜனதா அதை ஒருபோதும் அனுமதிக்காது. அதே நேரம் இஸ்லாமிய பெண்களின் நலனுக்காக முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தது பா.ஜனதா அரசுதான்.
காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீட்டுக்கு எதிரானது. கட்சியையும், அரசியல் சாசனத்தையும், குடும்பத்தின் சொத்தாகக் கருதுகிறீர்கள். 35ஏ சட்டப்பிரிவை நாடாளுமன்றத்தில் கொண்டு வராமல் அரசியல் சட்டத்தில் சேர்த்தீர்கள். நாட்டின் நிலப்பரப்பு (கச்சத்தீவு) தாரைவார்க்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்தான்” என்று அமித் ஷா கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தான் எதாவது தவறாக சொன்னால் மட்டுமே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று சொல்லிவிட்டு அமித்ஷா தனது பேச்சை தொடர்ந்தார். அப்போது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை மேற்கோள் காட்டி பேசிய அமித் ஷா, “எவ்வளவு நல்ல அரசியலமைப்பாக இருந்தாலும், அது யார் கைகளுக்கு செல்கிறது என்பது முக்கியம். தவறான கைகளுக்குச் சென்றால் அது மோசமாகவே இருக்கும்” என்றார். மேலும், பா.ஜ.க. அரசு நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் என்றும், காங்கிரஸ் அரசு கடந்த காலங்களில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவே இருந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.