வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் மாடு மேய்க்க சென்ற இளம்பெண்ணை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையை பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
குடியாத்தம் கே.வி.குப்பம் பகுதியில் துருவம் எனும் கிராமம் இருக்கிறது. இங்குள்ள மக்களுக்கு மாடுகள் வருவாய் ஆதாரமாக இருக்கிறது. எனவே பெரும்பாலான மக்கள் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள சிவலிங்கம் என்பவருக்கும் சொந்தமாக சில மாடுகள் இருக்கின்றன. இவருக்கு மொத்தம் 5 பெண்கள் உண்டு. 4 பெண்களை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். கடைசி பெண்ணாக அஞ்சலி 22 வயது இருக்கிறார். அஞ்சலி நேற்று காலை மாடுகளை மேய்க்க அருகில் இருந்த காப்பு காட்டுக்குள் சென்றிருக்கிறார். வழக்கமாக பொழுது இருட்டுவதற்குள் வீடு திரும்பிவிடுவார். ஆனால் நேற்று அப்படி நடக்கவில்லை. எனவே அவரை தேடி சிவலிங்கம் காட்டுக்குள் சென்றிருக்கிறார். அங்கு அவர் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, அஞ்சலி வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்திருக்கிறார்.
இதனையடுத்து ஊர் மக்களுக்கு தகவல் சொன்ன சிவலிங்கம், கே.வி.குப்பம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸ், அஞ்சலியை கொன்றது சிறுத்தை என்பதை உறுதி செய்திருக்கின்றனர். இதனையடுத்து அவரது உடல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்றிரவு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உடனடியாக சிறுத்தையை பிடித்து விடுவோம் என்று கூறியுள்ளார். மாடு மேய்க்க சென்ற இளம்பெண் சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் வேலூர் மாவட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.