அமித் ஷாவின் உரையில் 12 விநாடிகள் பொய் தகவல்களை சேர்த்து பரப்பியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமித் ஷாவின் உரையின் 12 விநாடிகள் மூலம் பொய்யை பரப்பியதால், மக்களவையில் ராகுல் காந்திக்கு எதிராகவும், மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எதிராகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கிரண் ரிஜிஜு, “அம்பேத்கருக்கு இழைத்த அநீதிக்காக காங்கிரஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையில் நாங்கள் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்பதையும், அம்பேத்கர் விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாடு மற்றும் வரலாறு என்ன என்பதையும் நாங்கள் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளோம். காங்கிரஸுக்கு சொல்வதற்கு எதுவும் இல்லாததால், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ராகுல் காந்தி ஒரு தலைவராக இருந்து கொண்டு சலசலப்பில் ஈடுபடுவது அவருக்கு ஏற்புடையதல்ல. எனவே, ராகுல் காந்தி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எங்கள் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.” என தெரிவித்தார்.
அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக டெல்லி விஜய் சவுக் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள் இன்று (டிச. 20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். மேலும், நேற்று பாஜக எம்பிக்கள் நடந்து கொண்ட விதம் குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன் பேசும்போது, “நேற்றைய நிகழ்வு என்பது வேண்டும் என்றே மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளே செல்ல முடியதாவாறு அவர்கள் படிகளில் நின்று கொண்டு மறித்தார்கள். நானே அதைப் பார்த்தேன். அவர்கள் எவ்வாறு தடுக்க முற்படலாம்?” என கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேருக்கு நேர் நின்று கோஷங்களை எழுப்பியது குறித்துப் பேசிய பாஜக எம்.பி சி.பி.ஜோஷி, “இது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல். காங்கிரஸும் அதன் தலைவர்களும் எப்போதும் இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் சிதைக்க முயற்சி செய்து வருகின்றனர். நேற்றைய சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உண்மை முகத்தை நாட்டுக்கு முன் அம்பலப்படுத்தியது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இந்த சதியை தீட்டி உள்ளார்கள்.” என குறிப்பிட்டார்.
இதனிடையே, நேற்றைய சம்பவத்தில் காயமடைந்த பாஜக எம்பிக்கள் பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோரை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களின் உடல் நிலை குறித்து ஆர்எம்எல் மருத்துவர் அஜய் சுக்லா கூறுகையில், “இருவரும் நலமாக உள்ளனர். ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது ஐசியூவில் உள்ளனர். மருத்துவர்கள் குழு அவர்களை கண்காணித்து வருகிறது. அவர்களின் டிஸ்சார்ஜ் குறித்து மூத்த மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ரிப்போர்ட் இரண்டும் நார்மல்” என்றார்.