ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, சமையல் காஸ் வெளியேறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த பயங்கர விபத்தில், அருகே நின்றிருந்த சுற்றுலா பேருந்து பயணிகள் உட்பட 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 35 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். 14 பேரை காணாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து தலைநகர் ஜெய்ப்பூருக்கு சமையல் காஸ் டேங்கர் லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் 22 டன் சமையல் காஸ் நிரப்பப்பட்டு இருந்தது. அதிகாலை 5.30 மணி அளவில் ஜெய்ப்பூரின் பாங்க்ரோட்டோ பகுதி டிபிஎஸ் பள்ளி அருகே உள்ள வளைவில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு லாரியுடன் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் டேங்கர் மூடி திறந்து கொண்டதில், சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு காஸ் பரவியது. லாரியை சுற்றி சுமார் 200 மீட்டர் தூரம் வரை அடர்ந்த பனிமூட்டம் போல காஸ் சூழ்ந்தது. இந்த நிலையில், டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சாலையில் அதன் அருகே நின்றிருந்த 40-க்கும் மேற்பட்ட வாகனங்களும் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தன. டேங்கர் லாரிக்கு அருகே தனியார் சுற்றுலா சொகுசு பேருந்து நின்றிருந்தது. அதில் 34 பயணிகள் இருந்தனர். அந்த பேருந்து முழுமையாக தீப்பிடித்து எரிந்தது.
இந்த பயங்கர விபத்தில், பேருந்து பயணிகள், அருகே இருந்த வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 11 பேர் உடல் கருகிஉயிரிழந்தனர். பலத்த தீக்காயம் அடைந்த 35 பேர், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த 14 பேரை காணவில்லை. தீ விபத்தில் அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் பஜன்லால் சர்மா அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஜெய்ப்பூர்- அஜ்மீர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தீக்காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம், மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.7 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது. காயமடைந்தவர்களில் சுமார் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
காஸ் கசிவு மற்றும் தீ விபத்து காரணமாக சுமார் ஒரு கி.மீ. தூர எல்லைக்குள் பறந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பறவைகளும் உயிரிழந்துள்ளன. நெடுஞ்சாலை அருகே உள்ள சில ஆலைகளிலும் தீப்பிடித்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து நேரிட்ட பகுதியில் சுமார் 4 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. சுமார் 100 மீட்டர் தூரத்தில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் ராட்சத குழாய் உள்ளது. அதிர்ஷ்டவசமாக அவை பாதிக்கப்படவில்லை.