அல்லு அர்ஜுன் விவகாரத்தில் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகினரையும் சரமாரியாக விமர்சித்துள்ளார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
புஷ்பா 2 சிறப்புக் காட்சியின்போது, தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததால், அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியானார். அவரது 9 வயது மகன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிருக்குப் போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கானா மாநில சட்டசபையில் இன்று புஷ்பா 2 பட ரிலீஸின்போது சிறப்புக்காட்சி பார்க்க வந்த ரேவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அக்பருதின் ஒவைஸி எழுப்பிய கேள்விக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று பதிலளித்துப் பேசினார். ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-
சம்பவம் நடந்த சந்தியா தியேட்டர் உள்ள பகுதி நிறைய ஹோட்டல்கள், தியேட்டர்கள் இருக்கும் பகுதி என்பதால், பாதுகாப்பு கருதி அங்கு வரவேண்டாம் என போலீசார் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜூன் அங்கு சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம். தியேட்டருக்கு வெளியே ஒருவர் உயிரிழந்துவிட்டார். கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் உள்ளது என போலீசார் தெரிவித்த பிறகும், படத்தை முழுவதுமாக பார்த்த பிறகுதான் புறப்படுவேன் என அல்லு அர்ஜூன் கூறியுள்ளார். சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அந்த பெண்ணின் மகனும் பலத்த காயமடைந்தார். காவல் துணை ஆணையர், நீங்கள் புறப்படாவிட்டால் கைது செய்வோம் எனக் கூறி வலுக்கட்டாயமாக அழைத்த பிறகுதான் அவர் புறப்பட்டார். அப்போதும் வெளியே சென்று காரின் மேற்கூரையை திறந்து ரோடு ஷோ நடத்துகிறார். என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்? அவர்களை பற்றி நான் எதுவும் சொல்லக்கூடாதா.
இந்த சம்பவம் தொடர்பாக, அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இரவு மட்டும் சிறையில் இருந்து மறுநாள் ஜமீனில் விடுதலையாகி வீட்டிற்கு சென்றார். அல்லு அர்ஜுன் சில மணி நேரமே சிறையில் இருந்தார். உடனே நடிகர்கள் பலரும் அவரது வீட்டிற்குச் சென்று ஆதரவு தெரிவிக்கிறார்கள். அவர் வீட்டிற்கு சென்றபோதும் அவரை பார்க்க வரிசையில் பலர் நிற்கின்றனர். அல்லு அர்ஜுன் என்ன கை, கால்களை இழந்துவிட்டாரா? நாங்கள் யாரோ சிலரின் பேச்சைக் கேட்டு அவரை கைது செய்ததாக தகவல் பரப்புகிறார்கள். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனை யாரும் சென்று பார்க்காதது துரதிர்ஷ்டவசமானது.
உங்கள் தொழிலை நடத்தவும், உங்கள் திரைப்படங்களை எடுக்கவும், பணம் சம்பாதிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. எங்கள் அரசாங்கத்திடமிருந்து உங்களுக்கு ஊக்கத்தொகை, மானியங்கள் மற்றும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும். ஆனால், ஒருவரின் கொலைக்கு காரணமான பிறகு, இனிமேல் உங்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்காது. இத்தனை வருடங்களில் சினிமா துறைக்கு டிக்கெட், விலை மற்றும் சிறப்பு காட்சிகள் என சலுகைகள் வழங்கப்பட்டு நன்றாக இருந்தது. ஆனால் இப்போது திரையுலகம் சாமானியர்களைக் கொல்லத் தொடங்கிவிட்டது. இனிமேல், நான் மாநில முதல்வராக இருக்கும் வரை திரைத்துறைக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடைக்காது. நான் முதலமைச்சராக இருக்கும் வரை தெலுங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்பு காட்சிகள் கிடையாது. இவ்வாறு ஆவேசமாகப் பேசியுள்ளார் ரேவந்த் ரெட்டி.