கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணை ஒப்படைப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணையை அவரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம், அமைச்சர் மு.பெ சாமிநாதன் வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 188 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 15.32 கோடி நூலுரிமைத் தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் மட்டும் 139 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு 9.71 கோடி நூலுரிமைத் தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு நாளிதுவரை 31 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ.3.75 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 22.08.2024 அன்று, முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத்தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

இவ்வறிவிப்பிற்கிணங்க இலக்கிய இலக்கணப் படைப்புகளாகவும் ஆய்வாகவும் தமிழன்னைக்குத் தொண்டறம் பூண்டு வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான க. ராஜாத்தி அம்மாளுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கியதற்கான அரசாணையினை இன்று 22.12.2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணியளவில் அவர்களின் இல்லத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனால் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு.பெ சாமிநாதன் கூறியதாவது:-

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்கள் நாட்டுமையாக்குவதற்காக, முதல்வர் ஸ்டாலினால் நடவடிக்கை எடுத்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வகையில் அவருடைய அனுமதியோடு, அவரின் உத்தரவின் அடிப்படையில் இன்றைக்கு அந்த அரசாணையை, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடத்தில் அரசின் சார்பில் ஒப்படைத்தோம்.

ஏறத்தாழ பல்வேறு படைப்புகளை தந்தவர். இன்னும் சொல்லப்போனால், பள்ளிப்பருவத்தில் தான் எழுதத் துவங்கி “மாணவன் நேசன்” என்கின்ற பத்திரிகை கையேடை துவங்கி அதிலிருந்து முரசொலியில் உடன்பிறப்பிற்கான பல்லாயிரக்கணக்கான கடிதங்களை எழுதி இடையில் குரளோவியம், நெஞ்சுக்கு நீதி, சங்கத் தமிழ் போன்ற படைப்புகளை தந்தவர். திரையுலகிலும் முத்திரை பதித்தவர். அதேபோல, 5 முறை இந்த நாட்டின் முதல்வராக பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 70 ஆண்டு காலம் பணியாற்றியவர்.

அப்படிப்பட்ட மகத்தான தலைவருடைய நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டு, இதுவரை 179 படைப்பாளர்களுடைய நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டிருக்கிறது. அதற்கெல்லாம், அரசின் சார்பில், நிதி வழங்கப்பட்டிருந்தாலும் பாரதியாரை தவிர, இன்றைக்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தார் அதற்கு எதுவும் தொகை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, கட்டணம் இல்லாமல், இன்றைக்கு நிதி இல்லாமல் அந்த படைப்புகள் நாட்டுமையாக்கப்பட்டுள்ளது. மொத்தம், 179 நூல்கள் பல்வேறு தலைப்புகளில், நெஞ்சுக்கு நீதி, குறளோவியம், சங்கத்தமிழ் மற்றும் முரசொலியில் தொடர்ந்து உடன்பிறப்பிற்கான கடிதங்கள் இப்படிப்பட்ட அனைத்து படைப்புகளும் இன்றைக்கு நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.